நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் கைதானது எப்படி? – இன்று சென்னை அழைத்து வரப்படுகிறார் | Kasthuri arrested in Hyderabad

1339966.jpg
Spread the love

சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் போலீஸார் கைது செய்தனர்.

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசும்போது, தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு தெலுங்கு பேசும் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து கஸ்தூரி பேட்டி அளித்தார். அதேநேரத்தில் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை, மதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் அடுத்தடுத்து 6 புகார்கள் அளிக்கப்பட்டன.

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், நடிகை கஸ்தூரி மீது 4 சட்ட பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற சம்மனை வழங்குவதற்கு போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரி வீட்டுக்கு போலீஸார் சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவர் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வந்தன.

இதனிடையே, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கஸ்தூரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ‘முன்ஜாமீன் வழங்கக் கூடாது’ என அரசுதரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கஸ்தூரி தரப்பில், “சென்னை கூட்டத்தில் கஸ்தூரி சிலரை குறிப்பிட்டே அவ்வாறு பேசினார். மொத்த சமூகத்துக்கு எதிராகவும் அவர் பேசவில்லை. இருப்பினும் வருத்தம் தெரிவித்துள்ளார்’’என வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதி, ‘‘கஸ்தூரி வருத்தம் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவு, அவர் பேசியதை நியாயப்படுத்துவதுபோல் உள்ளது. குறிப்பிட்ட வார்த்தைகளுக்காக அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்ததோடு முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தார். இதையடுத்து, கஸ்தூரியை கைது செய்யும் நடவடிக்கையில் சென்னை மற்றும் மதுரை போலீஸார் தீவிரம் காட்டினர். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கஸ்தூரியை சென்னை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். அவர் இன்று (17-ம் தேதி) சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீஸார் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *