கோவை: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது என, நடிகை ராதிகா தெரிவித்தார்.
பாஜக சார்பில் கோவை வெள்ளலூர் புறவழிச்சாயைில் மூன்றாவது ஆண்டாக மோடி ரேக்ளா போட்டி இன்று நடந்தது. குறிப்பிட்ட நேரத்தில் பந்தய தூரத்தை அடைந்த மாட்டு வண்டி வீரர்கள் மற்றும் மாடுகளுக்கு இருசக்கர வாகனம், கோப்பை ஆகிய பரிசுகளை நடிகை ராதிகா வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவரை மாட்டு வண்டியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் நடிகை ராதிகா சரத்குமார் பேசியதாவது: பாரம்பரியமான ரேக்ளா போட்டியை நடத்துவது நல்ல முயற்சியாகும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு மைதானம் இருப்பது போல ரேக்ளா போட்டிக்கும் மைதானம் அமைக்க வேண்டும். உழவன் மகன் படத்தில் நடிக்கும் போது இந்த ரேக்ளா போட்டி போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற போட்டிகளை மக்கள் ரசித்து பார்வையிடுவதுடன், மிகுந்த வரவேற்பு அளிக்கின்றனர்.
பிரதமர் மோடிக்கு தமிழகத்தின் மீது அன்பும் மரியாதையும் உண்டு. எனவே ரேக்ளா போட்டிக்கு மைதானம் அமைக்க அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றால் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. பெரியார் தொடர்பான சர்ச்சை செய்திகளை நானும் பார்த்தேன். எது சரி, தவறு என்பது மக்களுக்கு தெரியும். தமிழக வெற்றி கழகம் இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிலையில் விஜய்க்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.