நாகர்கோவில்: “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்துள்ளது, வளர்ச்சிக்கான பட்ஜெட். நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் நிதி அறிக்கை உள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் முதன்மையானதாக இந்த பட்ஜெட் உள்ளது,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கீழகருப்புக்கோடு பகுதியை சேர்ந்த வேலாயுதன், தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏவாக இருந்தவர் . குமரி மாவட்டத்தின் வளர்ச்சியிலும் பாஜக கட்சியை வளர்த்ததிலும் பெரும் பங்கு கொண்ட வேலாயுதன் உடல் நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது இல்லத்தில் வேலாயுதன் உருவச்சிலை மற்றும் மணிமண்டப திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (ஜூலை 23) நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்து, அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் சமர்ப்பித்து சாதனை படைத்துள்ளார். தேர்தலுக்குப் பின் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் பத்தாண்டு காலமாக மோடி அரசு வைத்துள்ள இலக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்னெடுத்து செல்வதற்கான பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் நிதி அறிக்கை உள்ளது. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த பட்ஜெட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் முதன்மையானதாக இந்த பட்ஜெட் உள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு இந்தியாவின் முக்கிய கம்பெனிகளில் அவர்களின் திறன் மேம்பாடுகளை ஊக்கப்படுத்துவதற்காக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதற்கான திட்டத்தை அறிவித்திருக்கிறார். முத்ரா வங்கி கடன் 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. 14 பெரிய நகரங்களுக்கு இந்த ஸ்பெஷல் பட்ஜெட் கொடுக்கப்பட்டுள்ளது. நகர்புறத்தில் இருக்கக்கூடிய ஏழைகளுக்கு பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஒரு கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளது. இது வளர்ச்சிக்கான பட்ஜெட்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் எத்தனையோ முறை டிஎன்பிஎஸ்சி குரூப் 1, மற்றும் 2 தேர்வு வினாத்தாள் லீக் ஆகி உள்ளது. அதற்காக டிஎன் பிஎஸ் சி தேர்வு வேண்டாம் என்று சொல்ல முடியாது. தமிழகத்தில் அரசியல் நேர்மையாக நடக்கவில்லை. தினமும் பெரிய போராட்டம் தான் நடக்கிறது. நவம்பர் டிசம்பர் மாதத்தில் தமிழக பாஜகவில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.