மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கொல்கத்தாவைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் சென்னை தரமணியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி இரவு தனது கல்லூரி நண்பர்களுடன் மாணவி ஹோட்டலில் உணவு அருந்தி இருக்கிறார்.
அதன் பின்னர் ஹோட்டலில் இருந்து கிளம்பிய அந்த பெண் நண்பர்களுடன் தரமணி கலிக்குன்றம் பகுதியில் நின்று பேசி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த முதியவர் ஒருவர், அந்த மாணவியிடம் முதலில் பேச முற்பட்டு இருக்கிறார். பின்னர் அந்த மாணவி தொட்டு பேசிய முதியவர், படிபடியாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி முதியோரிடம் விலகி செல்ல முயற்சி செய்து இருக்கிறார். அப்போது மாணவியுடன் இருந்த நண்பர்கள் முதியவரை பிடித்து தரமணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவம் நடந்த இடம் கோட்டூப்புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், அந்த முதியவரை அந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து நேற்று அந்த மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் முதியவர் மீது புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் முதியவர் மீது போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில் அந்த முதியவர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காசி என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த கோட்டூர்புரம் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
