லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு பயணிகள் விமானம் (எண் SQ321) சென்றது. இந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்தனர். இது போயிங் 777-300-ERரக விமானம் ஆகும்.
விமானம் குலுங்கியது
நடுவானத்தில் விமானம் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென விமானம் தாறுமாறாகக் குலுங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். பலர் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டு விழுந்தனர்.
இதில் பலருக்கும் மோசமான காயங்கள் ஏற்பட்டது. இதனால் விமானத்தை அவசரமாக பாங்காக்கில் விமானி தரையிறக்கினார்.
பயணி பலி
வானிலை மோசம் காரணமாக விமானம் குலுங்கி விபத்து ஏற்பட்டதில் அதில் பயணம் செய்த லண்டனை சேர்ந்த 73 வயது ஆண் பயணி ஒருவர் பலியானார். அவர் மாரைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 71 பயணிகளுக்கு பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.
அவர்கள் உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று (செவ்வாய்கிழமை) மாலை 3.45 மணிக்கு விமானம் தரையிறங்கி உள்ளது.
சீரற்ற காற்று
இது குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எங்கள் விமானத்தில் ஏற்பட்ட மோசமான சம்பவத்தில் ஒரு பயணி உயிரிழந்துள்ளார். இறந்த நபரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.மற்ற பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம். நிலைமையைச் சமாளிக்க மேலும் ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்பி உள்ளோம்“ என்று கூறப்பட்டுள்ளது.
சீரற்ற காற்று மற்றும் காற்று சுழல்கள் காரணமாக(டர்புலன்ஸ்) இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற பகுதிகளை விமானம் கடக்கும் போது விமானம் லேசாகக் குலுங்கும்.
டர்புலன்ஸ்
ஆனால், ரொம்பவே அரிதான நேரங்களில் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் நடக்கும். டர்புலன்ஸ் ஏற்பட்டால் பயணிகள் சீட் பெல்ட் அணியுமாறு விமானி உடனடியாக பயணிகளுக்கு அறிவுறுத்துவார். கழிவறை உட்பட எங்கும் செல்லக்கூடாது. இருப்பினும், அதையும் மீறி பயணிகள் சீட் பெல்ட் அணியாதபோது தான் இதுபோன்ற காயங்கள் ஏற்படுகின்றன.
விமானி எச்சரிக்கை
விமானம் சென்று கொண்டு இருந்தபோது ரேடாரில் டர்புலன்ஸ் குறித்த எச்சரிக்கை முன்கூட்டியே தெரியாததால் விமானியால் முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய முடியவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாகவே பயணிகள் விமான இருக்கையில் இருந்து தூக்கி எறியப்பட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் இதேபோல் டெல்லி-யில் இருந்து சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இதேபோன்று டர்புலன்ஸ் காரணமாகப் சில பயணிகள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.