சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல நூறு பொய்களை கூறி, ஆட்சிக்கு வந்தபின், தமிழகத்தை இந்தியாவின் நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றியது திமுக.
காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, ஊழலை தவிர வேறொன்றும் செய்யாமல் நாட்டைத் தேக்க நிலையில் வைத்திருந்த திமுக, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பட்டிருக்கிறது என்பதை அறியாதது ஆச்சரியம்.
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சென்னை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்கள், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள ரயில் நிலையங்கள், மெட்ரோ திட்டங்கள் என நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு கடன் பெற்றுள்ளது. நீங்கள் வாங்கிய கடன் எதற்காக? உங்கள் கட்சித் தலைவர், கேட்ட கேள்வியைத்தான் தற்போது முன்வைத்திருக்கிறோம். வாங்கிய கடனில் உங்கள் கமிஷன் எவ்வளவு அல்லது, கமிஷனுக்காக கடன் வாங்குகிறீர்களா என்பதை தெளிவுபடுத்துங்கள்.