சென்னையில் நடைபெற்று வரும் 49-வது புத்தகத் திருவிழாவில், வார இறுதிநாள் என்பதால் வாசகர்கள் கூட்டம் களைகட்டியது.
அங்கு வாசகர்களால் சூழப்பட்டிருந்த, விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை தனது எழுத்துகளில் தொடர்ந்து பதிவு செய்து வரும் எழுத்தாளர் ஜெயராணியை சால்ட் பதிப்பக அரங்கில் சந்தித்து உரையாடினோம்.
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் மிஸ் செய்யக் கூடாத முக்கிய புத்தகங்கள் எவை எவை குறித்து பேசிய அவர், “எழுத்தாளர் நரனின் சமீபத்திய ‘குமாரத்தி’ நாவல் சால்ட் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது.
இது கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகவே வெளிவரும் என்று அவரது வாசகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நாவல். புனைவு வாசிப்பவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்.
பெண்களை மையப்படுத்தி, குறிப்பாக குடும்ப சாதிய அமைப்புமுறையில் கௌரவத்துக்காக பெண்கள் சந்திக்கும் வன்முறைகளை மையமாகக் கொண்டு எழுதியுள்ளார்.

சமூகத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் அரூபமாக வாழும் மனிதர்களான கன்னியாஸ்திரி, திருடர், பாலியல் தொழிலாளி, தூக்கு தண்டனை கைதி போன்றவர்களின் வாழ்வை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆணவக் கொலைகளை பற்றியும் பேசுகிறது. கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம்.