சீன ஊடுருவல் குறித்தும், அப்போது ராணுவத் தளபதியாக இருந்த நரவானே, தான் சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் “ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’ என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்துக்கு இன்னும் ஆளும் பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், சீன ஊடுருவல் குறித்த விவாதத்தின்போது ராகுல் காந்தி, நரவானே எழுதிய புத்தகம் தொடர்பாக காரவன் இதழில் வெளியான செய்திக்கட்டுரையை மேற்கோளிட்டு பேச முயன்றார்.
அதற்கு கடுமையான எதிர்வினையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் படிக்கவே விடவில்லை. மேலும், சீனா ஊடுருவல் குறித்துப் பேச அனுமதியும் மறுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, மக்களவையில் அத்துமீறியதாக தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமருக்கு இன்று மக்களவைக்கு வரும் துணிச்சல் இருக்காது எனக் கருதுகிறேன். ஒருவேளை அவர் வந்தால், (முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய ‘ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’ என்ற) இந்தப் புத்தகத்தை நானே நேரில் சென்று அவரிடம் வழங்குவேன். அப்போதுதான் அவர் இதைப் படிக்க முடியும்.