நலத்திட்டப் பொருட்களின் படங்களை பதிவேற்றும் பணி: கூடுதல் பணிச்சுமை என அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விரக்தி | Uploading images of welfare items: Govt school teachers frustrated as extra workload

1286144.jpg
Spread the love

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டப் பொருட்களின் படங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யும் உத்தரவால் ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள், சீருடைகள், காலணிகள், மிதிவண்டிகள் உள்ளிட்ட விலையில்லா பொருள்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2024-25) மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதர நலத்திட்ட பொருட்களும் படிப்படியாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, விலையில்லா பொருட்களை வழங்கும்போது அதை ஆசிரியர்கள் மாணவர்களுடன் சேர்த்து புகைப்படம் எடுத்து எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை சார்பில் கடந்த மாதம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதாவது, எமிஸ் தளத்தில் பாடநூல், சீருடை, காலணி என ஒவ்வொரு மாணவரும் பெற்றுக்கொண்ட பொருட்களின் படங்களை தனித்தனியாக எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஏற்கெனவே இந்த தளத்தில் நெட்வொர்க் சரிவர கிடைப்பதில்லை. கூடுதல் பணிச்சுமையாக இருப்பதால் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை பள்ளிக்கல்வித் துறையும் ஏற்றுக்கொண்டதாகவும், அந்த படங்களை பதிவு செய்ய தேவையில்லை என்று தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம், செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் துறைசார்ந்த அதிகாரிகள் எமிஸ் தளத்தில் படங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென கூறுவிட்டதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, “படங்கள் எடுத்து அதை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கே நேரம் சரியாக இருக்கும். ஒரு வகுப்புக்கு 50 மாணவர்கள் இருந்தால் ஒரு ஆசிரியர் நூற்றுக்கணக்கான படங்களை எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கும். இதனால் கற்பிக்கும் பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை” என்றனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, “எமிஸ் தளத்தில் மாணவர்களுக்கு நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்பட்ட விவரங்களை உறுதி செய்தால் போதும். ஆசிரியர்கள் படங்களை பதிவு செய்யத் தேவையில்லை. பிளஸ் 1 மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை மட்டும் படம் பிடித்து பதிவு செய்யவே அறிவுறுத்தியுள்ளோம். ஏனெனில், நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு தரப்படும் மிதிவண்டிகளில் ‘எமிஸ்’ எண்கள் பொறிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இதன்மூலம் மிதிவண்டிகளின் உதிரி பாகங்கள் சேதமடைந்தால் அதை உரிய மாணவர்களுக்கு மாற்றி தர இயலும். மேலும், முறைகேடுகளையும் தவிர்க்க முடியும்.” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *