நல்லகண்ணு பல்லாண்டு வாழ்ந்து வழிநடத்த வேண்டும்: பிறந்தநாள் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்வர் வாழ்த்து | May the nallakannu live and lead for many years says cm stalin

1344758.jpg
Spread the love

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, பல்லாண்டு வாழ்ந்து, இளைஞர்களை வழிநடத்தி, அவர்களோடு துணை நிற்க வேண்டும் என்று, அவரது பிறந்தநாள் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பிறந்தநாள் நூற்றாண்டு தொடக்க விழா சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, நல்லகண்ணுவுக்கு பொன்னாடை போர்த்தி, நூல்கள் வழங்கி கவுரவித்தார். விழாவில் முதல்வர் பேசியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. கலைவாணர் அரங்கில் வரும் 29-ம் தேதி நாள் முழுவதும் நடைபெற உள்ள நூற்றாண்டு விழாவில் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்று வாழ்த்த உள்ளனர். இதற்காக பழ.நெடுமாறன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சமூக நீதி, சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபட்டவர் நல்லகண்ணு. இந்த விழாவில் நான் அவரை வாழ்த்த வரவில்லை, அவரிடம் வாழ்த்து பெற வந்திருக்கிறேன். அவர் பல்லாண்டுகள் வாழ்ந்து, இளைஞர்களை வழி நடத்தி, அவர்களோடு துணைநிற்க வேண்டும். இந்த மதச்சார்பற்ற கூட்டணியின் பலத்தை பார்க்கும்போது, 2026 தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்பது உறுதி. இது கொள்கை கூட்டணி மட்டுமல்ல, நிரந்தர கூட்டணியாகவும் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தின் நிறைவாக பேசிய நல்லகண்ணு, ‘‘எல்லோரும் ஒன்றிணைந்து போராடி இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றோம். இந்த சுதந்திரம் நீடிக்க வேண்டும் என்றால், சமத்துவம், சகோதரத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என அம்பேத்கர் தெரிவித்துள்ளார். அவர் வழியில் நாம் போராட வேண்டும்’’ என்றார். விழாவில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முன்னாள் எம்.பி.அப்துல் ரகுமான், மமக எம்எல்ஏ அப்துல் சமது, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘போராட்டம், தொண்டு, பொதுநலன், இதுவே நல்லகண்ணுவின் நூறாண்டுகால வாழ்க்கை பக்கங்களில் நிறைந்திருக்கும் சரிதம். எளிமையான வாழ்வுக்கு சொந்தக்காரர் என்பதைவிட, பொதுவுடைமை கருத்தியலுக்காக கடுமையான வாழ்வை எதிர்கொண்ட தீரர் அவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு காணும் வேளையில், செங்குருதி சிந்தி பாடுபட்டநல்லகண்ணுவும் நூற்றாண்டு காண்கிறார். இயக்கமே உயிர்மூச்சு என வாழும் அவரை போற்றுவோம். தகைசால் தமிழரே, தமிழகமே தங்களை வாழ்த்துகிறது. தங்களது வழிகாட்டுதலில் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் முன்செல்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், வேலூர், கோவை, திருப்பூர், ஈரோடு என 100 இடங்களில் புத்தக கண்காட்சிகள் நடத்தப்பட்டன. அங்கு புத்தகங்களுக்கு 20% சிறப்பு கழிவு வழங்கப்பட்டது.

மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர்: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தியபோது, தான் பிறந்த வைகுண்டம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று நல்லகண்ணு கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி. ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, கூடுதல் வசதிகளுடன் புதிய மருத்துவமனை கட்டிடம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த கட்டிடத்துக்கு ‘தோழர் நல்லகண்ணு நூற்றாண்டு கட்டிடம்’ என்று பெயரிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *