நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

Dinamani2f2025 02 032f29be728d2fmk Stalin Zoom Edi.jpg
Spread the love

நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட வெற்றி வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையின் இலக்கணமாகச் செயல்பட்டு, கட்சியின் வெற்றிக்காக உழைத்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கும் தோழமைக் கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமைக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் ஆற்றிய பணியை மறக்க முடியாது. பல்வேறு சமூக அமைப்புகள், கட்சிகள் தி.மு.க.வின் வெற்றிக்காகப் பணியாற்றினார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும், மக்கள் ஆதரவுடன் 2021-ஆம் ஆண்டு அமைந்த இந்த ஆட்சிக்கும், நாம் செயல்படுத்தி வரும் உன்னதமான திட்டங்களுக்கும் மக்கள் அளித்துள்ள மாபெரும் அங்கீகாரம்தான் இந்த வெற்றி! தேர்தலுக்கு முன்னதாகவே வெற்றி யாருக்கு என்பதை உணர்ந்து விட்ட எதிர்க்கட்சிகள், களத்துக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடிய காட்சியையும் முன்கூட்டியே தமிழ்நாடு பார்த்து விட்டது.

2019 முதல் நடைபெற்ற இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், சட்டமன்றப் பொதுத் தேர்தல், உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் ஆகிய அனைத்திலும் தி.மு.க. கூட்டணியானது தொடர் வெற்றியைப் பெற்று வந்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. படுதோல்வியை அடைவதும் தொடர்கதையாக அமைந்தது. எனவே தேர்தல் களத்துக்கே வராமல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பங்கெடுக்காமல் தலைமறைவானது அ.தி.மு.க. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்குப் பாடம் புகட்ட மக்கள் தயாரான நிலையில் இங்கும் பதுங்கிவிட்டது. தொடர் தோல்விகளால் ஏற்பட்ட சோர்வும், தேர்தல்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாமலும் போன அ.தி.மு.க. இன்று மக்கள் மனதில் இருந்து மெல்லமெல்ல மறைந்து மங்கிக் கொண்டிருக்கிறது என்பதே முழு உண்மையாகும்.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியைப் பொருத்தவரையில் மூன்றரை ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்கள்முன் வைத்தோம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் தனிப்பட்ட முறையில் பயனடையும் திட்டங்களை நிறைவேற்றி வருவதை மக்கள் அனைவரும் நேரடியாக உணர்ந்துள்ளார்கள். சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கும் நிலையையும் தாண்டி, சாதனைகள் என்பவை மக்கள் மனதில் பதிந்ததாக இருந்தது.

மகத்தான திட்டங்களைத் தரும் தி.மு.க. அரசுக்கு, மகத்தான வெற்றியைத் தர மனமுவந்து மக்கள் முடிவெடுத்தார்கள். தங்களது பெரிய எண்ணத்தை எண்ணிக்கையாகக் காட்டி வாக்குகளை அள்ளித் தந்துள்ள ஈரோடு கிழக்கு வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈரோடு கிழக்கு தேர்தல்: திமுக வெற்றி; டெபாசிட் இழந்த நாதக!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *