6 மணிக்கு மேல் காவல்துறையினர் செவிலியர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். கைதானவர்களை பேருந்தில் அடைத்து நகருக்கு வெளியே அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே விடுவித்திருக்கின்றனர். பேருந்து நிலையத்தின் ப்ளாட்பார்மில் கூடிய 700 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இரவு முழுவதும் அங்கே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்திருக்கின்றனர். அதிகாலை 4 மணியளவில் காவல்துறையினர் அவர்களை கைது செய்து ஊரப்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்திருக்கின்றனர்.

சிவானந்தம் சாலையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து சுகாதாரத்துறைச் செயலாளர் பி.செந்தில்குமார் பேசியிருக்கிறார். அந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பதை செவிலியர்களின் பிரதிநிதிகள் சிலரிடம் கேட்டோம். “எங்களின் கோரிக்கை என்னவென்றே தெரியாததைப் போல, ‘எதுக்காக போராடுறீங்க..’னுதான் பேச்சையே ஆரம்பித்தார். பின், ‘நீங்க போராடுனாலும் போராடாட்டியும் இந்த அரசுக்கு செவிலியர்களுக்கு அக்கறை இருக்கு’ என்றார். அப்படியெனில், ‘எங்களை பணி நிரந்தரம் செய்யுங்கள். முதற்கட்டமாக எத்தனை பேரை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பிருக்கிறது’ என்றோம். அதற்கு, ‘அப்படி கற்பனையாலாம் என்னால சொல்ல முடியாது’ என்றார். முழுமையாக எங்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்பதற்கு முன்பாகவே, ‘எனக்கு வேற மீட்டிங் இருக்கு’னு சொல்லி கிளம்பிவிட்டார்’ என்றனர்.