நள்ளிரவு வரை சோதனை ஏன்? – டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி | High Court questions Enforcement Directorate in TASMAC case

1355090.jpg
Spread the love

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை அடைத்து வைத்து சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், மார்ச் 25 வரை அமலாக்கத் துறை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என இடைக்காலத் தடை விதித்துள்ளனர்.

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் முடிவில் டாஸ்மாக் மதுபான கொள்முதல், பார் உரிமம், வாகன போக்குவரத்து, அதிகாரிகள் பணி நியமனம், இடமாறுதல் உள்ளிட்ட விவகாரங்களில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை மார்ச் 6 முதல் 8-ம் தேதி வரை நடத்திய இந்த தொடர் சோதனை மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள், வாக்குமூலங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது, செல்லாது என அறிவிக்கக் கோரியும், தமிழக அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த சோதனை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘‘இந்த சோதனையின்போது கடந்த நான்காண்டு காலத்தில் டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் நடைமுறைகள், மதுபான சில்லரை விலை நிர்ணயம், பார் உரிமம் தொடர்பாக நிர்வாக இயக்குநர், பொது மேலாளர், துணைப் பொதுமேலாளர் உள்ளிட்டோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 100-க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டு வாய்மொழியாக வாக்குமூலம் பெற்று, ஆவணங்களில் மிரட்டி கையெழுத்து பெற்றுள்ளனர்.

பெண் அதிகாரிகள் உள்ளிட்ட பலரை 60 மணி நேரத்துக்கும் மேலாக வெளியே செல்லவிடாமல் சட்டவிரோத காவலில் அடைத்து வைத்திருந்தனர். சில பெண் ஊழியர்களை அவர்களது செல்போனை பெற்றுக்கொண்டு மறுநாள் காலை 8 மணிக்கெல்லாம் வந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நள்ளிரவு 1 மணிக்கு வீட்டுக்கு செல்ல அனுமதித்தனர். ஊழியர்கள், அதிகாரிகளின் செல்போனில் இருந்த அனைத்து தனிப்பட்ட விவரங்களையும் சட்டவிரோதமாக சேகரித்துள்ளனர்’’, என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக இதேபோல மணல் குவாரி விவகாரத்திலும் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை நடத்தி மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் பிறப்பித்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தோம். தற்போது டாஸ்மாக் அலுவலகத்தில் சட்டவிரோதமாக சோதனை நடத்தியுள்ளனர்’’ என்றார்.

அதற்கு நீதிபதிகள், தமிழக அரசின் அனுமதி பெற்றே சோதனை நடத்த வேண்டும் என அமலாக்கத் துறையின் நடவடிக்கை குறித்து பொத்தாம் பொதுவாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை திருத்தம் செய்து புதிதாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.

அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, ‘‘ஒரு அரசு அலுவலகத்தில் சோதனை நடத்தினால் அதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக முன்னதாக தெரிவிக்க வேண்டும். ஆனால் அமலாக்கத் துறையினர் எந்த தகவலும் தெரிவிக்காமல் 3 நாட்களாக சோதனை நடத்தியுள்ளனர். 60 மணி நேரத்துக்கும் மேலாக பெண் அதிகாரிகளைக்கூட விடுவிக்காமல் நள்ளிரவிலும் சோதனை நடத்தியிருப்பது தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானது. அதிகாரிகளை மிரட்டி வாக்குமூலம் பெற்றுள்ளனர்’’, என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘டாஸ்மாக் பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை அடைத்து வைத்து சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏன்? சோதனைக்கான காரணங்களை தெரிவிக்காதது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பினர்.

பொய் சொல்லாதீர்கள்! – அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசி்ன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர், ‘‘இரவில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை. அனைத்து ஊழியர்களும் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்’’ என்றனர்.

அப்போது நீதிபதிகள் ‘‘பொய் சொல்லாதீர்கள், என்ன நடந்தது என்பது நாளிதழ்களில் விரிவாக செய்தி வெளிவந்துள்ளது. அமலாக்கத் துறையின் சோதனையை நாங்கள் குறைகூறவில்லை. அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை செயல்படுத்திய விதம் குறித்துதான் கேள்வி எழுப்புகிறோம்.

எனவே தமிழக அரசின் இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை எதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்து மார்ச் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’’ என இடைக்காலத் தடை விதித்து விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *