கோவை: நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பாடத்திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்று வரும் இரண்டு நாள் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கோவையில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு செயலர் மதுமதி, ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன், பள்ளிகல்வித்துறை இயக்குநர்கள் கண்ணப்பன், நரேஷ், பழனிசாமி, குப்புசாமி மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.
தமிழக பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்தும், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 3-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படும் மாவட்டங்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தும், குறைந்த ரிசல்ட் தரும் மாவட்டங்களுக்கு தலைமை ஆசிரியர்களை ஊக்கப்படுத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கலந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் தங்கள் சார்பில் அதிகாரிகளை அனுப்பி உள்ளனர். அவர்களின் குறைகள் கேட்கப்பட்டு தீர்வு காணப்படும்.ஒவ்வொரு முறை நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் அனைவரும் வெளிப்படையாக பேச வேண்டும். பத்திரிகை, ஊடகங்களில் வரும் செய்திகள் குறித்து விளக்கம் தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக முதல்வர் கொண்டு வந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டு சென்று சேர்ந்திருக்கிறதா, விலையில்லா பொருட்கள் எந்த அளவுக்கு சென்று சேர்ந்திருக்கிறதா என்பது குறித்து கேட்டறியப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தேவைப்படும் சீருடை, புத்தகங்கள் பள்ளி சார்ந்த பொருட்கள் சேதம் அடைந்திருந்தால் பள்ளி குழந்தைகளுக்கு சென்று சேர்ந்திருக்கிறதா என விவாதிக்கப்பட்டது. பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் அமைந்துவிட்டால் எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
அந்தவகையில், தலைமை ஆசிரியர்களை ஊக்கப்படுத்திட வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டி ஊக்கப்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 2000 பள்ளிகளுக்கு யார் வேண்டுமானாலும் வந்து மாணவர்களின் கல்வித்திறனை சோதித்து பார்க்கலாம் என தலைமை ஆசிரியர்கள் சவால் விட்டுள்ளனர். எனவே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் சென்று ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தை விட மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் அதிக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்ட ஒரே மாநிலம் தமிழகம் தான். நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய அம்சங்கள் பாடத்திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு பள்ளிகளில் 22,931 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் போர்டு) வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு இணையவசதி வரும்போது உலகத்தரத்திலான கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.