நவீன மீன் அங்காடியில் கடைகள் ஒதுக்கீடு: மெரினா வளைவு சாலையில் மீன் வியாபாரத்துக்கு தடை | Allotment of stalls to vendors in fish market: Ban on fish trade on loop Road

1322795.jpg
Spread the love

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா வளைவு சாலையில் புதிதாக கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியில் சாலையோர மீன் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் அப்பகுதிகளில் உள்ள சாலையோர கடைகளை அகற்றும் பணிகள் இன்று (அக்.7) தொடங்கியது.

சென்னை மெரினா வளைவு சாலை பகுதி மீனவர்கள் வசிக்கும் பகுதி என்பதால், அவர்கள் பிடித்த மீன்களை அதே சாலையில் விற்பனை செய்து வருகின்றனர். மீன்களை அறுக்கும்போது உருவாகும் கழிவுகள் அங்கேயே கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை திறப்பதாக புகார்கள் எழுந்தன. இதில் சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு, அந்த கடைகளை முறைப்படுத்த மாநகராட்சிக்கு அறிவுறுத்தியது.

அதனைத் தொடர்ந்து இப்பகுதி மீன் வியாபாரிகளுக்கென மாநகராட்சி சார்பில் ரூ.15 கோடியில் 366 கடைகள் கொண்ட நவீன மீன் அங்காடி, மெரினா வளைவு சாலையில் உள்ள நொச்சிக்குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான குடிநீர், கழிப்பறை வசதிகள், மீன்களைச் சுத்தம் செய்யத் தனியாக 2 பகுதிகள், இவ்வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரைச் சுத்திகரித்த பின் வெளியேற்றும் வகையில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நவீன மீன் அங்காடியை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இதன் தொடர்ச்சியாக கடைக்காரர்களுக்கு மாநகராட்சி சார்பில் சில தினங்களுக்கு முன்பு கடைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவர்கள், சாலையோரமே விற்பனையை தொடர்ந்தனர். இந்நிலையில், சாலையோரம் கடை வைத்திருந்தவர்களை நவீன அங்காடியில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் விற்பனையை தொடங்குமாறு இன்று (அக்.7) மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி, சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகளை அகற்றினர்.

அதனைத் தொடர்ந்து, மீன் வியாபாரிகள் தங்கள் உடைமைகளை நவீன அங்காடிக்குள் எடுத்துச் சென்று வைக்கத் தொடங்கினர். மாநகராட்சி சார்பில் சாலையோரம் அவர்கள் விட்டுச் சென்ற கழவுகளை லாரிகளில் ஏற்றிச் சென்றனர். இதன் தொடர்ச்சியாக மெரினா வளைவு சாலையை, சாலையோர வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, அதுகுறித்த விவரங்கள் அடங்கிய பதாகைகளை அந்த சாலையில் நிறுவி வருகின்றனர். ஓரிரு நாட்களுக்குள் சாலையோரம் உள்ள அனைத்து மீன் விற்பனை கடைகளும் அகற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *