நவ. 15-க்குள் நியாய விலை கடைகளுக்கு கோதுமை 100% அனுப்பப்பட்டுவிடும்: தமிழக அரசு விளக்கம் | 100% of wheat will be sent to fair price shops by Nov. 15: Tamil Nadu government explains

Spread the love

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 12,573 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், நவ. 15-க்குள் நியாய விலை கடைகளுக்கு கோதுமை 100% அனுப்பப்பட்டுவிடும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று ஒரு நாளிதழில் வந்த செய்தியை வைத்து எடப்பாடி பழனிசாமி 12,573 கடைகளில் கோதுமை இல்லை என்று கூறியிருக்கிறார். ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரை கோதுமை ஒதுக்கீடு மாதம், 8,576 மெட்ரிக் டன் மட்டுமே ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆணையின்படி தமிழ்நாட்டுக்கான கோதுமை ஒதுக்கீட்டினை உயர்த்திட ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அக்டோபர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை 8,576 மெட்ரிக் டன்னிலிருந்து 17,100.38 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுப் பொது மக்களுக்குத் தங்குதடையின்றி நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது மார்ச் 2025 முதல் கோதுமை ஒதுக்கீட்டைப் பழைய அளவுக்கே குறைத்துத் தற்போது மாதம், 8,576 மெட்ரிக் டன் கோதுமை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 2025 மாதத்திற்கு 8722 மெட்ரிக் டன் கோதுமை மாவட்டங்களுக்கு நுகர்வின் அடிப்டையில் உப ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த மூன்று மாதங்களில் கோதுமையின் நுகர்வு சதவீதம் சராசரியாக 92% எனப் பதிவாகி உள்ளது. நவம்பர் மாதத்தில் 08.11.2025 வரை 63% (5,386 மெட்ரிக் டன்) கோதுமை நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யபட்டுள்ளது. இருப்பு மற்றும் நுகர்வின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 20 ஆம் நாளுக்குள் அனைத்துப் பொருள்களும் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். ஆனாலும்15.11.2025-க்குள் 100% கோதுமையும் நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு வழக்கம் போல் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும்.

நடப்புக் குறுவைப் பருவத்தில் 9/11/25 வரை 1923 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 13.48 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 1.75 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ3249.38 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் கடைசி ஆண்டில் இதே காலகட்டத்தில் 4.41 இலட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. அவர் ஆட்சியில் பொது ரகத்திற்கு குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 1,918, சன்ன ரகத்திற்கு ரூ. 1,958 மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் பொது ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 2,500, சன்ன ரகத்திற்கு ரூ. 2,545 வழங்கப்பட்டு வருகிறது. ஆதலால் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றிலும் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *