சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆடு-மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு போன்றவற்றை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. 2026 தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், மற்ற அரசியல் கட்சிகள் அரசியல் பரப்புரைக் கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், சீமான் நடத்தும் மாநாடுகள் பேசும் பொருளாகி உள்ளன. இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் ‘தண்ணீர் மாநாட்டை’ நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: உயர்ந்த விற்பனை பண்டமாக, நிறைய பொருளீட்டுகிற, லாபம் குவிக்கிற சந்தைப் பண்டமாக தண்ணீர் மாறி இருப்பது ஆபத்தான போக்கு. இவற்றை விளக்கும் வகையில் தண்ணீர் மாநாடு-2025-ஐ நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இன்றைய சூழலில் இது அவசியமான மாநாடாகும். “ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி. பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி. நீரின்றி அமையாது உலகு. நினைவில் நிறுத்திப் பழகு” என்ற முழக்கத்தை முன்வைத்து தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பூதலூரில் உள்ள கரிகால் பெருவளத்தான் திடலில் வரும் 15-ம் தேதி மாலை 5 மணிக்கு தண்ணீர் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கட்சியின் அனைத்து கட்ட நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.