கோவை: பிரதமர் மோடி வரும் 19-ம் தேதி கோவை வருகிறார். இதையொட்டி 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கொடிசியா அரங்கில் கோவை மாநகர காவல் ஆணையர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கோவை கொடிசியா அரங்கில் இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். மேலும், சிறப்பாக செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு பிரதமர் விருது வழங்குகிறார். இந்த மாநாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
கோவையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வரும் 19-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 1.25 மணிக்கு கோவை வருகிறார். மதியம் 1.30 மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 1.40 மணிக்கு கொடிசியா அரங்கம் செல்கிறார். அங்கு விழாவில் கலந்து கொண்ட பின்னர் மதியம் 3.15 மணிக்கு பிரதமர் மோடி புறப்பட்டு 3.30 மணிக்கு விமான நிலையத்தை அடைகிறார். பின்னர், விமானம் மூலம் கோவையிலிருந்து டெல்லி செல்கிறார்.
பிரதமர் மோடியின் கோவை வருகையை முன்னி்ட்டு போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கொடிசியா மைதானத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
பிரதமர் வரும் பாதை, கலந்து கொள்ளும் அரங்கு, முடிந்து வெளியே செல்லும் பாதை உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். பிரதமரின் வருகையையொட்டி, கோவை விமான நிலையத்தில் போலீஸார் மற்றும் எஸ்பிஜி படையினர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் கோவை வருகையை முன்னிட்டு, விழா நடைபெறும் பகுதி, பிரதமர் வந்து செல்லும் வழித்தடங்களி்ல் மொத்தம் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.