திருச்சி: டெல்லியில் நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ரயிலில் புறப்பட்டுச் சென்றனர்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இருமடங்கு லாபம் தரும் வகையில் வேளாண் விளை பொருட்களுக்கு விலை அறிவிக்க வேண்டும். 60 வயது கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நவ.19, 20-ம் தேதிகளில் (நாளை, நாளை மறுநாள்) தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதையொட்டி, அய்யாக்கண்ணு தலைமையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து வைகை விரைவு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். பின்னர், அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்ல உள்ளனர். திருச்சியில் நடைபெற்ற வழியனுப்பு நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மேகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.