நவ.24-ல் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா: அதிமுகவினருக்கு பழனிசாமி அழைப்பு | Former Chief Minister Janaki centenary on 24th Nov

1340455.jpg
Spread the love

அதிமுக சார்பில் நவ.24-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற கட்சியினர் அனைவருக்கும் பொதுச்செயலாளர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களுக்கு அனைத்து வகைகளிலும் சேவை ஆற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எம்ஜிஆரால் `அதிமுக தோற்றுவிக்கப்பட்டது. அதன் பிறகு ஜெயலலிதா தலைமையிலும், தொடர்ந்து நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களாகிய உங்கள் அனைவரின் நல்லாதரவோடும், எனது தலைமையில் அதிமுக மக்கள் பணிகளை தொய்வில்லாமல் ஆற்றி வருகிறது.

அந்த வகையில் எமஜிஆரின் துணைவியும், முன்னாள் முதல்வருமான ஜானகியின் நூற்றாண்டு விழா, அதிமுக சார்பில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், வரும் நவ.24-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. ஒரு இக்கட்டான காலகட்டத்தில் “என்னைவிட என் கணவர் ஆரம்பித்த கட்சியே பெரிது’’ என்று ஞானம் மிகுந்த முடிவெடுத்து, கழக வெற்றியின் வேருக்கு நீர் வார்த்து வரலாற்றில் இடம்பெற்ற பெருமைக்குரியவர் ஜானகி. அவரது நல்ல உள்ளத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பிறந்த நாள் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.

ஆகவே, கட்சி சார்பில் நடைபெற உள்ள, நமது குடும்ப நிகழ்ச்சியான ஜானகியின் நூற்றாண்டு விழாவில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி எம்எல்ஏக்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், எம்ஜிஆர் மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கத்தின் அனைவரும் விழாவில் பங்கேற்க வேண்டும். மேலும் வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழகத்தின் அடிமட்டத் தொண்டர்களும், பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *