சென்னை: பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கான கால வரம்பு, நவ.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடு கடந்த நவ.15-ம் தேதியுடன் முடிவடைந்தது. முன்னதாகவே, கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பிலும், பல்வேறு விவசாயிகள் சங்கத்தின் சார்பிலும், பயிர்க் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, தற்போது மத்திய அரசு வரும் நவ.30-ம் தேதி வரை பயிர்க் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறும்போது, “வழக்கமாக ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையில் சம்பா பருவம். இந்தாண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையில் சரியாக பயிர் சாகுபடி நடைபெறவில்லை. அக்டோபர் மாதத்தில் குறைந்த அளவே பயிர்க்காப்பீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், நவம்பர் 15-ம் தேதியுடன் காப்பீட்டு காலவரையறை முடிந்தது. முன்னதாக, வேளாண் துறை செயலர் மத்திய அரசுக்கு நீட்டிப்பது குறித்து விவரங்களுடன் கடிதம் எழுதினார். இதையடுத்து, மத்திய வேளாண்துறை பிரதமரின் பயிர்க் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை வரும் நவ.30ம் தேதி வரை நீட்டித்தது உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பயிர்க் காப்பீடு செய்வதற்கான இணைய இணைப்பு மீண்டும் மதியம் முதல் செயல்படத் தொடங்கியுள்ளது’’ என்றனர்.