நவ. 7ல் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு விழா – தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட பாஜக வேண்டுகோள் | People of Tamil Nadu should celebrate the 150th anniversary of Vande Mataram in a grand manner says BJP

Spread the love

சென்னை: நாளை நடைபெற உள்ள வந்தே மாதரம் தேச பக்திப் பாடலின் 150 வது ஆண்டு விழாவை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் உள்ள குழந்தைகள் அனைவரையும் ஊக்குவித்து குடும்பத்துடன் கொண்டாட வேண்டும்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாரதத்தின் அனைத்து மக்களுக்கும் தேசபக்தியை ஊட்டி வளர்த்த, வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா தமிழக மாணவர்கள் இளைஞர்கள் பள்ளி கல்லூரிகளில் விழாக்களை நடத்த தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தேச பக்தி திருவிழாவில் மக்கள் அனைவரும் பங்கு கொள்ளும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரிய வழிகாட்டலை தமிழக அரசின் அனைத்து துறைகளுக்கும் வழங்க வேண்டும்.

நாளை (நவம்பர் 7) நடைபெற உள்ள ‘வந்தே மாதரம்’ 150வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மன்கி பாத் என்ற பெயரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி மக்களுடன் மனம்திறந்து பேசி வருகிறார். இதன் 127-வது உரையை கடந்த அக்30–ஆம் தேதி ஞாயிறன்று வழங்கிய அவர், 1896-ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் முதன்முதலாக இந்தப் அற்புத பாடலைப் பாடிய வரலாற்றையும், நாட்டுப்பற்று உணர்வை எழுப்பும் முக்கியமான ஆயுதமாக இந்தப் பாடல் தொடர்ந்து செயல்பட்டு வருவதையும் பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.

வந்தே மாதரம் என்கிற தேசபக்தி மந்திரச் சொல் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் அளவற்ற உணர்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்துகிறது. இந்தப் பாடல் தலைமுறைகளை இணைத்து, தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு வலு சேர்க்கும் விதத்தில் மக்கள் மனதில் அன்பை விதைத்துவரும் தேசிய உணர்வின் குறியீடு என்றும் பெருமையுடன் குறிப்பிட்டார்.

மேலும்,140 கோடி இந்தியர்களின் ஒற்றுமைக்கும் ‘வந்தே மாதரம்’ பாடல் ஒருங்கிணைந்த குரலாக ஒலித்து வருகிறது. துன்பங்கள் வந்த தருணங்களில் “‘வந்தே மாதரம்’ என்ற முழக்கம் நம் அனைவரையும் ஒன்றிணைத்து உற்சாகம் தருகிறது. மேலும் வந்தே மாதரம் பாடலை ஒலிப்பவர்களின் மனதில் சக்திமிகு பாரத மாதாவின் பெருமையை , வலிமையை உணர்த்தி சக்தியை அளிக்கும் சிறப்பு கொண்டது என்று பிரதமர் உணர்ச்சி பொங்க பேசினார்.

வந்தே மாதரம் பாடலை எழுதிய பாங்கிம் சந்திர சட்டோபாத்யாயை நாடு என்றும் மறக்காது, அவர் நாட்டின் சுதந்திர உணர்வை ஊக்குவிக்க எழுதிய, இந்த அற்புத படைப்பு நூற்றாண்டுகளாக இந்தியாவின் உயிரோட்டமாக உள்ளது . “19-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டாலும், இந்திய மரபின் பல்லாயிரம் ஆண்டு சிந்தனையோடு இந்தப் பாடல் ஆழமாக இணைந்துள்ளது” என்றும் மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.

‘வந்தே மாதரம்’ கொண்டாட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பங்களிப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் . நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்த விழாக்களில் பங்கேற்று, வந்தே மாதரத்தின் பாரம்பரியத்தையும், இந்திய உணர்வையும் உயர்த்த பங்களிக்க வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, தமிழக மக்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள தேசபக்தி இயக்கங்கள் , தேசிய சிந்தனையாளர்கள் நவம்பர் 7-ஆம் தேதி நடைபெறும் இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ 150வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை, கிராமங்கள் நகரங்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் தேசபக்தி திருவிழாவாக சிறப்பாக கொண்டாட அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் கலை, இலக்கிய போட்டிகள் , சுதேசி பொருள்களை ஊக்குவிக்கும் கண்காட்சிகள் உள்ளிட்ட விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் மிகப்பெரிய பங்கையும், தமிழக மக்களின் வீரத்தையும் விவேகத்தையும் பண்பாடு கலாச்சாரம் நாகரீகத்தையும் போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், கருத்தரங்கங்கள் என அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து பொதுமக்களில் அனைவரும் வந்தே மாதரம் பாடல் பிறந்த 1050 ஆவது ஆண்டு விழாவை தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டாடும் வண்ணம் சிறந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

சாதி, மத, இன பாகுபாடு இல்லாமல் கட்சி பேதங்களை மறந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு, பல நூறு ஆண்டுகளைக் கடந்த இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தியாக வரலாற்றையும், 75 ஆண்டுகளுக்கு மேலான இந்திய சுதந்திரத்தின் மகிழ்ச்சியையும் வெற்றியையும் மனமகிழ்ந்து கொண்டாடும் வகையில், தமிழக அரசும் “வந்தே மாதரம் ” திருவிழாவை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

அதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், சமூகநல இயக்கங்களும், சமுதாய அமைப்புகளும், அனைத்து சங்கங்களும் , தொண்டு நிறுவனங்களும் , மக்கள் நல இயக்கங்களும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய அன்பான அழைப்பை ஏற்று, பிரதமருடன் இணைந்து வரும் நவம்பர் 7-ஆம் தேதி நடைபெறும் இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ 150வது ஆண்டு விழா கொண்டாட்டங்களை சிறப்பாக கொண்டாடி தேசிய நீரோட்டத்தில் தமிழகத்தின் வலிமையான பங்களிப்பை அளிக்க வேண்டும்.

தமிழக பாஜகவும் வந்தேமாதரம் பாடலின் 150 வது விழா திருநாளை மிகச் சிறப்பாக தமிழக மக்களுடன் இணைந்து கொண்டாட இருக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் பிரதமரின் அழைப்பை ஏற்று தமிழக பாஜக நடத்த உள்ள வைத்து கொண்டாட்டங்களிலும் தமிழக மக்கள் குடும்பத்துடன் பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் குறிப்பாக தாங்கள் வசிக்கும் பகுதியில் தங்கள் வீடுகளில், தங்கள் அலுவலகங்களில் நவம்பர் 7ஆம் தேதி அன்று தேசபக்தியை ஊட்டி வளர்த்த வந்தே மாதரம் பாடலை, குடும்பத்துடன் குழந்தைகளுடன், உறவினர்கள் நண்பர்கள், சக தொழிலாளர்களுடன் பாடி மகிழ்ந்து தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட வேண்டுகிறோம்.

சுப்ரமணிய பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, தேசியக் கொடி காத்த திருப்பூர் குமரன், ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற வீரர் வாஞ்சிநாதன், வீரத்துடன் தீரத்துடன் பங்கு கொண்ட அஞ்சலை அம்மாள் என அனைவரும் சுதந்திர தீயை ஊட்டி வளர்த்த வந்தே மாதரம் பாடலை, வீடுகளிலும், தெருக்களிலும், சுதந்திரப் போராட்டங்களிலும் சென்ற இடமெல்லாம் பாடி பாரத மக்களை ஒற்றுமைப்படுத்தி இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்தார்கள்.

இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் வலிமை சேர்க்க அன்றும் இன்றும் என்றும் நம் நினைவில் நிற்கக்கூடிய “வந்தே மாதரம்” முழக்கமும் பாடலும் சிறுவயதில் நாம் கேட்டு பாடி மகிழ்ந்து தேசபக்தியோடு செயல்பட்டது போல், நம்முடைய குழந்தைகள், மாணவர்கள், இளைஞர் இடத்திலும் கொண்டு போய் சேர்ப்பதற்கான வாய்ப்பாக வந்தேமாதரம் பாடலின் 150 வது விழா திருநாளை உள்ளம் குளிர, எண்ணம் சிறக்க, மறைந்த தியாகிகள் நினைவைப் போற்றி மகிழ்ந்து, தேசபக்தி செழிக்க தமிழகமெங்கும் நம்முடைய இல்லங்கள் தோறும் கொண்டாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *