`நாகப்பட்டினத்தை விசிக-வுக்கு தராதீர்கள்' – நிர்வாகிகள் கோரிக்கை – ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன?

Spread the love

திமுக-வில் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களிடம் நடைபெற்ற நேர்காணல் நேற்றுடன் நிறைவு பெற்றது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தொகுதி வாரியாக நேற்று நேர்காணல் நடந்தது. இதில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை 37 பேர் விருப்பமனு அளித்திருந்தனர். அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் செய்தார். அப்போது தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

திமுக-வினரிடம் நேர்காணல் நடத்தும் ஸ்டாலின்

மாவட்டச் செயலாளர் கெளதமன், `நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக’ சொல்லியிருக்கிறார். இதைதொடர்ந்து பெரும்பாலான நிர்வாகிகள், `நாகை தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க கூடாது. நாமே நேரடியாக போட்டியிட வேண்டும்’ என ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், “நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடுவதற்கு கெளதமன், மனோகரன், எடிசன் உள்ளிட்ட பலர் விருப்ப மனு அளித்திருந்தனர். வேட்பாளர் ரேஸில் இவர்கள் முன்னணியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மாவட்டச் செயலாளரான கெளதமன் பெயரில் 10க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்திருந்தனர். 2021 தேர்தலில் வேட்பாளர் லிஸ்டில் கெளதமன் பெயரே இருந்தது. கடைசி நேரத்தில் விசிக உள்ளே புகுந்ததால் சீட் கைமாறியது. இந்த முறை எப்படியும் சீட் வாங்கி விட வேண்டும் என கெளதமன் காய் நகர்த்துகிறார். நாகையில் கெளதமன் முயற்சியால் ஸ்டாலின் அறிவாலயம் கட்டப்பட்டது. இது போல் அவரது பணிகள் பட்டியலிடப்பட்டு தலைமையிடம் ஏற்கனவே கொடுக்கப்பட்டதாம். ஸ்டாலின், உதயநிதி இருவரது குட் புக்கிலும் கெளதமன் இருப்பதாக சொல்கிறார்கள்.

நாகப்பட்டினம் திமுக நேர்காணல்

இந்த சூழலில் நேற்று நடைபெற்ற நேர்காணலில் கலந்து கொண்ட அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த முறை தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்காதீர்கள், குறிப்பாக விசிகே-வுக்கு ஒதுக்க கூடாது, திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார்களாம். அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து சொன்னதால் ஸ்டாலின் இதை பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார்.

நாகையின் சிட்டிங் எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ். இவர் மீண்டும் நாகையில் போட்டியிட விரும்புகிறாராம். இதே போல் சிபிஐ, மனித நேய மக்கள் கட்சிகளும் தொகுதியை குறி வைத்திருக்கிறார்கள்.

முன்கூட்டியே சுதாரித்து கொண்ட திமுக-வினர் இம்முறை தொகுதியை கூட்டணிக்கு விட்டு கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். கடந்த முறை போல் நழுவிய வாய்ப்பை இந்த முறை விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் கெளதமன். இவரது மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின், கெளதமன் கடினமான உழைப்பாளி, எதையும் யோசிக்காமல் கட்சி வேலையை செய்யக்கூடியவர் என்று பாராட்டினார். இவையெல்லாம் தற்போது கெளதமனுக்கு ப்ளஸாக அமைந்துள்ளது. மேலும் ஸ்டாலின் மனதில் கெளதமன் தான் இருக்கிறார் என்பதால் அவர் தான் வேட்பாளர் என நம்புகிறார்களாம் அவர்கள் தரப்பினர்” என முடித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *