நாகூர் தர்காவின் சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்காவின் சந்தனக்கூடு திருவிழா வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15.12.2024 வரை நடைபெறுவதையொட்டி, துணை முதல்வர் ஞாயிற்றுக்கிழமை (நவ.24) விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்குப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
உலகப்புகழ் பெற்ற நாகூர் தர்காவின் சந்தனக்கூடு திருவிழா வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.
நம்முடைய முதல்வர் உத்தரவின்படி, நாகூர் சந்தனக்கூடு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அமைச்சர்களுடன் அதிகாரிகளுடன், மக்கள் பிரதிநிதிகளுடன் ஆய்வு செய்திருக்கின்றோம். நாகூர் சந்தனக்கூடு விழா சிறக்க அனைத்து ஏற்பாடுகளையும் நம்முடைய திராவிட மாடல் அரசு சிறப்பாக செய்துள்ளது.
முக்கியமாக, சந்தனக்கூட்டிற்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை தமிழ்நாடு அரசே கட்டணமின்றி தர்கா நிர்வாகத்துக்கு வழங்கியுள்ளது. அதற்கு தர்கா நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
சந்தனக்கூடு திருவிழாவுக்கு, தமிழ்நாடு மட்டுமன்றி, வெளியூர் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் வர உள்ளனர். அவர்களுக்கான
தங்குமிடம், உணவு, குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. குறிப்பாக 500 மீட்டருக்கு ஒரு இடத்தில் குடிநீர்த்தொட்டி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும், பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. நாகூர் சந்தனக்கூடு திருவிழாவின்போது தற்காலிக மருத்துவ முகாம் அமைக்க உத்தரவிட்டிருக்கின்றோம்.