நாகை மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்குக்கு இயக்கம் செய்யும் பணி தொடங்கி தீவிரம் நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 5,000 ஏக்கரில் மட்டும் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு மேட்டூரில் இருந்து உரிய காலத்தில் (ஜூன் 12) தண்ணீர் திறக்கப்பட்டதால், 1.10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாவட்டத்தில் மொத்தம் 124 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிலையத்திலும் நாளொன்றுக்கு ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனாலும், அதிக விளைச்சல் காரணமாக விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
இந்நிலையில், தீபாவளி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் இயக்கம் செய்யப்படாததால், கொள்முதல் நிலையங்களில் அதிகளவில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. இவை மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கியுள்ளன.
மேலும், கொள்முதல் நிலையத்தில் மூட்டைகள் தேக்கம் அடைந்ததால், மேற்கொண்டு கொள்முதல் நடைபெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடை செய்த நெல் மூட்டைகளுடன் 10 நாட்களுக்கு மேலாக காத்திருப்பதாகவும், அந்த நெல்மணிகள் மழையில் நனைந்து முளைவிட்டு சேதமடைந்து வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வயல்கள் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதற்கிடையே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு லாரிகளை அனுப்பி, நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் குறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது: நெல் கொள்முதல் நிலையங்களில் இத்தனை நாட்களாக நெல் மூட்டைகளை இயக்கம் செய்யாமல், எதிர்க்கட்சித் தலைவர் வருகிறார் என்றதும் அவசர அவசரமாக இயக்கம் செய்யும் பணியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டிருக்கும் நிலையில், அவற்றை வேறு சாக்குகளுக்கு மாற்றி ஏற்றிச் செல்கின்றனர். அதேபோல், நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.