கலிதீர்த்த ஐயனார் ஆலயம் முழுவதும் குதிரை, யானை, புலி, நாய் மற்றும் பல்வேறு மனிதர்களின் சிலைகள் நிரம்பி உள்ளன. யார் இங்கு வேண்டிக் கொண்டாலும் அந்த வேண்டுதல் நிறைவேறியதும் அவர்களின் சிலையை இங்கு வைத்துவிடுகிறார்கள்.
டாக்டராக, போலீசாக விரும்பிய பலரும் அது நிறைவேறியதும், அந்த உடையோடு சிலையாக நிற்பதையும் இங்கு காணலாம். திருமண வரம் வேண்டுவோர், திருமணம் ஆனதும் தம்பதியாக சிலைகளை இங்கு வைக்கிறார்கள். நோய் குணமானவர்களும் அவர்களுடைய சிலையை இங்கு வைக்கிறார்கள். ஆலயம் எங்கும் குழந்தை, மணமக்கள், புரவிகள் சிலைகளும் ஆயிரம் கண் பானைகளும் நிரம்பி இந்தக் கோயிலின் மகத்துவத்தைச் சொல்லியபடியே உள்ளது.

‘இந்த மாதம் பிள்ளை பிறக்கும்’ – பலிக்கும் பூசாரியின் வாக்கு
பிள்ளை வரம் வேண்டுவோர், இங்கு வந்து வேண்ட, பூசாரியின் அருள்வாக்கால் நல்ல சேதி கேட்கிறார்கள். இந்த மாதத்தில் இந்தப் பிள்ளை பிறக்கும் என்று சந்தோஷமான சேதியைக் கேட்டு அந்த ஐயனாரே உத்தரவு கொடுத்ததாக நம்பி உற்சாகம் கொள்கிறார்கள்.
அதேபோல பிள்ளை வரமும் கிடைக்க, மகிழ்கிறார்கள். இது கண்கூடாக இன்றும் நடந்துவரும் அதிசயம் என்கிறார்கள். ஏகாந்தமாக அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் தூண்டில்காரன், வீரன், பெத்தாள், பெரியாச்சி, சம்பவராயன் சந்நிதிகளும் உள்ளன.
பிள்ளை வரம் வேண்டி வருபவர்களிடம் கோயில் பூசாரி ஒரு தேங்காயைக் கொடுத்து, வீட்டில் அதை பூரண கும்பம் போல் சொம்பில் வைத்து வணங்கி வரச் சொல்கிறார். குழந்தை பிறந்ததும் அந்தச் சொம்பும் தேங்காயும் கோயிலில் மீண்டும் சமர்ப்பிக்கப்படுகிறது.
அதேபோல், திருமணம் தள்ளிப்போனவர்களுக்கும், திருமண நாளை சரியாகச் சொல்லி அனுப்புகிறார் இந்தக் கோயில் பூசாரி என்பதும் சிறப்பு.