நாகை மாவட்டம், நீடூர் சோமநாதர்: சனி தோஷங்கள் தீரும்… கடக ராசி, லக்னக்காரர்களுக்கான பரிகாரத்தலம்!

Spread the love

சிவபெருமான் அருளும் தலங்கள் பல நம் தேசத்தில் உள்ளன. அவற்றில் தேவர்கள் வழிபட்ட தலங்கள் அநேகம். நாம் அந்தத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்தாலே நம் வினைகள் தீரும்.

கிரக தோஷங்கள் தொலையும். வாழ்வில் நன்மையும் நலமும் தேடிவரும். அப்படிப்பட்ட ஒரு தலம்தான் நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள நீடூர். ஊழிக்காலத்தும் அழியாது நீடித்திருக்கும் ஊர் என்பதால் ‘நீடூர்’ எனப் பெயர் பெற்றது என்கின்றனர்.

இந்தத் தலத்தில் இறைவன் சோமநாதராக அருள்பாலிக்கிறார். இங்கு உறையும் அம்மை ‘வேயுறு தோளியம்மை’ என்னும் இனிய திருநாமத்தோடு கொலுவீற்றிருக்கிறாள். அப்பர் பெருமானும், சுந்தரரும், சேக்கிழார் பெருமானும், மச்சபுராணமும் போற்றிப் புகழும் திருத்தலம் இது.

இத்தலம் இந்திரன் முதலான தேவர்களும் பிரமன், திருமால், பத்ரகாளி முதலிய தெய்வங்களும் சிவனை வழிபாடு செய்த தலம் இது.

நீடூர் சோமநாதர் திருக்கோயில்
நீடூர் சோமநாதர் திருக்கோயில்

ஒருமுறை இந்தத் தலம் வந்த இந்திரன், சிவபூஜை செய்யும் நேரம் நெருங்கிவிடவே காவிரிக்கரையில் இருந்த மண்ணை எடுத்து லிங்கம் செய்து பூஜை செய்து வழிபட்டான். பின்பு இறைவனைத் தன் இனிய கானத்தால் துதித்தான்.

இந்திரனின் கானத்தால் மகிழ்ந்த ஈசன் இந்திரன் முன்பு தோன்றி திருநடனக்காட்சி அருளினார். இதனால், இந்தத் தல இறைவனுக்கு, ‘கான நர்த்தன சங்கரன்’ என்ற திருநாமமும் ஏற்பட்டது.

இந்திரன் இங்குள்ள ஈசனிடம் வேண்டிக் கொண்டதற்கு இணங்க, இங்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அடுத்துவரும் 12 ஆண்டுகளில் சேரத்தக்க பொருள் செல்வங்களையும், புகழ், அனுபவப் பேரறிவு, அட்டமா ஸித்திகள், வீடுபேறு எனும் அருள் செல்வங்களையும் அருளும் பேரருராளனாக சோமநாதர் விளங்குகிறார் என்கின்றன புராணங்கள்.

தன்மசுதன் என்ற அசுரன், தான்செய்த பாவத்தால் நண்டாகப் பிறந்தான். தன் நிலைமாற வேண்டிக் காத்திருந்தவனுக்கு நாரத முனிவரின் தரிசனமும் உபதேசமும் கிடைத்தன.

நாரதர், நற்கதி ஏற்பட நீடூர் சோமநாதரை வழிபட அறிவுறுத்தினார். அதன்படி அவன் சோமநாதரை வழிபட, ஈசன் அருள்செய்து லிங்கத்துள் ஐக்கியமாகுமாறு அருள்பாலித்தார்.

நண்டு இறைவனை வணங்கி நற்கதி அடைந்த தலம் இது என்பதால் கடக ராசிக்காரர்களுக்குரிய பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. கடக ராசிக்காரர்கள், லக்னக் காரர்கள் இங்குவந்து ஈசனை வழிபடத் துன்பங்கள் தீர்ந்து நற்பலன்கள் மிகுதியாகும் என்பது நம்பிக்கை. மேலும் இத்தலம் முனையடுவார் நாயனார் முக்தி அடைந்த தலம் என்பது கூடுதல் சிறப்பு.

நீடூர் சோமநாதர் திருக்கோயில்
நீடூர் சோமநாதர் திருக்கோயில்

இங்கு கோயில்கொண்டிருக்கும் அம்மையை சூரியன் வழிபட்டு அருள்பெற்றதால் அன்னைக்கு ‘ஆதித்ய அபய வரதாம்பிகை’ என்ற திருநாமமும் உண்டு. அம்மனின் சந்நிதிக்கு முன் உள்ள மண்டபத்தில் சனி பகவானுக்குச் சந்நிதி உள்ளது.

அம்மனையும் சனி பகவானையும் ஓரிடத்தில் இருந்து தரிசனம் செய்ய இயலும். அவ்வாறு தரிசனம் செய்பவர்களுக்கு சனி தோஷம் நீங்கும் என்பது ஐதிகம். சகல கிரகங்களையும் தன் அருள்பார்வையால் வழிநடத்தும் அன்னையை வணங்கினாலே நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பதால் இங்கு நவகிரக சந்நிதி இல்லை.

இத்தலத்தில் விநாயகப் பெருமான் பெரியவர், பழையவர், புனிதமானவர் என்ற 3 நிலைகளில் சிந்தாமணி விநாயகர், செல்வமகா விநாயகர், சிவானந்த விநாயகர் என்று அருள்கிறார்.

புதிய செயல் தொடங்குபவர்கள் இவரை வணங்கினால் உரிய ஆலோசனைகள் கிடைத்து தொடங்கும் செயல் நல்லமுறையில் முடிவடையும் என்கிறார்கள் பக்தர்கள்.

நீடூர் சோமநாதர்
நீடூர் சோமநாதர்

இத்தலத்தில் ஆனந்த தீர்த்தம், செங்கழு நீரோடை, சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், இந்திர தீர்த்தம், பத்ரகாளி தீர்த்தம், முனிவரர் தீர்த்தம், பருதிகுண்டம், வருண தீர்த்தம் என்னும் நவ தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபட பிறவிப் பிணி தீரும் என்கிறது தலபுராணம்.

எப்படிச் செல்வது?: நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது நீடூர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *