நாக்பூர் மற்றும் விதர்பா பிராந்தியத்தின் பிற மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பருவமழை பெய்துவரும் நிலையில், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுத்தி வருகின்றன. கனமழையால் ஆறு, ஏரி போன்றவை நிரம்பியுள்ள நிலையில் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரத்தின் இரண்டாவது தலைநகரான நாக்பூரில் வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகின்றது. சந்திராபூருக்கு சிவப்பு எச்சரிக்கையும், நாக்பூர், அமராவதி மற்றும் வார்தா ஆகிய மாவட்டங்களுக்கு சனிக்கிழமையான இன்று ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நாக்பூர் விமான நிலையத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 90.6 மிமீ மழை பதிவாகியுள்ளதாக கண்காணிப்பு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனமழையைக் கருத்தில் கொண்டு நாக்பூர் மாவட்ட ஆட்சியர் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.
தொடர் மழையால் நாக்பூர் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாவட்டத்தின் கிராமப் பகுதிகளில் உள்ள இரண்டு பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
நாக்பூரில் உள்ள வானிலை மையம் அமராவதி, பண்டாரா, சந்திராபூர், கட்சிரோலி, கோண்டியா மற்றும் நாக்பூர் மாவட்டங்களில் உள்ள சில நீர்நிலைகளுக்கு மிதமான வெள்ள எச்சரிக்கையை வெளியிட்டது.
விதர்பாவின் நாக்பூர், பண்டாரா, சந்திராபூர், வார்தா, கட்சிரோலி, கோண்டியா, யவத்மால் மாவட்டங்களில் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் இடி, மின்னல் மற்றும் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது, மேலும் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
சந்திராபூருக்கு சிவப்பு எச்சரிக்கையும், நாக்பூர், அமராவதி மற்றும் வார்தா ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கட்சிரோலி மாவட்டத்தில், வெள்ளப்பெருக்கு காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் அல்லப்பள்ளி-பாம்ரகட் பகுதி உள்பட எட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.