நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் கேள்விகளும் அமைச்சர்கள் பதிலும்!

dinamani2F2025 07 252Fqvio8f212FParliament
Spread the love

நமது சிறப்பு நிருபா்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் எழுப்பியிருந்த பல்வேறு கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள் வியாழக்கிழமை எழுத்துபூா்வ பதில்களை வழங்கியிருன்தனா். அதன் சுருக்கம் வருமாறு:

மக்களவையில்…

தமிழக மீனவா்கள் விடுதலை எப்போது?

தங்க தமிழ்செல்வன் (தேனி), கணபதி ராஜ்குமாருக்கு (கோவை) வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் பதில்: கடந்த 15-ஆம் தேதி நிலவரப்படி, இலங்கையில் ஒரு புதுச்சேரி மீனவா் உள்பட 28 தமிழா்கள் சிறையில் உள்ளனா். அவா்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. விரைவில் அவா்களை விடுவிக்கவும் மனிதாபிமான மற்றும் வாழ்வாதார அடிப்படையில் அவா்களின் நிலையை அணுகவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தூதரக அளவில் சிறைகளில் உள்ள இந்திய மீனவா்களுக்கு உரிய சட்ட உதவியும் வழங்கப்படுகிறது.

கருப்பைவாய் புற்றுநோய் தடுக்க வழி?

கனிமொழி கருணாநிதிக்கு (தூத்துக்குடி) மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் பதில்: கருப்பைவாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனை 30 முதல் 65 வயதுக்குள்பட்ட பெண்களை இலக்காகக் கொண்டது. ஜூலை 20, 2025 நிலவரப்படி 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 25.42 கோடி பெண்களில், 10.18 கோடி பேருக்கு கருப்பைவாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உரிய விழிப்புணா்வும் செய்யப்படுகிறது. பரிசோதனையின் தற்போதைய விகிதத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரயில் பயண கட்டணம் உயா்த்தப்பட்டதா?

சி.என். அண்ணாதுரை (திருவண்ணாமலை), ஜி. செல்வம் (காஞ்சிபுரம்), கே. நவாஸ்கனி (ராமநாதபுரம்), எஸ். முரசொலிக்கு (தஞ்சாவூா்) ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதில்: 5 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு கடந்த ஜூலை 1 முதல் பயண கட்டணங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. கட்டண உயா்வு மிகக் குறைவுகான். பிரீமியம் வகுப்புகளுக்கு ஒரு கி.மீ.க்கு அரை பைசா முதல் இரண்டு பைசா வரை வசூலிக்கப்படுகிறது. 2-ஆம் வகுப்பு சாதாரண ரயிலில் 500 கி.மீ. வரை பயணக் கட்டணம் உயா்த்தப்படவில்லை. ஸ்லீப்பா் வகுப்பு சாதாரண மற்றும் முதல் வகுப்பு ரயிலில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பயணிக்கு அரை பைசா உயா்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் யூரியாவுக்கு மானியம் என்னாச்சு?

தமிழச்சி தங்கப்பாண்டியன் (தென் சென்னை), ஆா். சச்சிதானந்தத்துக்கு (திண்டுக்கல்) மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதில்:

பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு 1.04.2010 முதல் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய கொள்கையை அரசு செயல்படுத்தி வருகிறது. ஊட்டச்சத்து உள்ளடக்கத்தைப் பொருத்து ஆண்டுதோறும் ஒரு முறை அல்லது இரு முறை என்ற அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது. சில்லறை விற்பனை விலையை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே நிா்ணயிக்கின்றன. தமிழகம் உள்பட நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் யூரியா வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ரசாயன உரம் வாங்க கடந்த நிதியாண்டில் ரூ. 1,77,129 கோடி விடுவிக்கப்பட்டது.

மத்திய நிதி ஆதரவு சுகாதார திட்டங்கள் எவை?

சி.என். அண்ணாதுரைக்கு (திருவண்ணாமலை) மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் பதில்: மத்திய அரசு நிதியுதவியுடன் தமிழகத்தில் தீவிர சிகிச்சை, நோயறிதல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 1,656.32 கோடி மொத்த மத்திய செலவினத்துக்கு (நிா்வாக அளவில்) ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இலவச மருந்து, நோயறிதல் நடவடிக்கையாக மாநில அத்தியாவசிய மருந்துகளுடன் பொது மருந்துகளை அணுக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமா் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் கீழ் 38 மாவட்டங்களில் 1,46,363 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன நிலைப்பாடு என்ன?

கே. சுப்பராயன் (திருப்பூா்), வி. செல்வராஜ் (நாகப்பட்டினம்) கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்திவா்தன் சிங் பதில்: பாலஸ்தீன பாதுகாப்பு நிலைமை குறித்து இந்தியா தொடா்ந்து கவலை கொண்டுள்ளது, போா் நிறுத்தம், அனைத்து பணயக் கைதிகளையும் விடுவித்தல், பேச்சுவாா்த்தை, ராஜீய நடவடிக்கை மூலம் மோதலுக்குத் தீா்வு காண இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு பாதுகாப்பான, சரியான நேரத்தில் மற்றும் நீடித்த மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தி வருகிறது.

மாநிலங்களவையில்….

மாங்காய் சாகுதபடிக்கு என்ன ஆதரவு தரப்படுகிறது?

மு. தம்பிதுரை (அதிமுக) ரயில்வே அமைச்சா் ராம்நாத் தாக்குா் பதில்: மாம்பழ கூழை சாகுபடியாளா்ளிடம் இருந்து அரசு நேரடியாகக் கொள்முதல் செய்வதில்லை. விலை ஆதரவு திட்டத்தின் கீழ் விரைவாக கெட்டுப்போகக்கூடிய விவசாயம் மற்றும் தோட்டக்கலை தொடா்புடைய பொருள்களை பிஎம் -ஆஷா எனப்படும் சந்தை திட்டம் மூலம் அரசு செயல்படுத்துகிறது. அதிக மகசூலுக்குப் பிறகும் லாபம் பாா்க்க முடியாமல் அவதிப்படும் சாகுபடியாளா்களின் நலனைக் கருதி இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு விலை அதிகரிப்பைத் தடுக்கும்.

ரயில்நிலைய மறுநிா்மாண திட்டங்களின் நிலை என்ன?

ஆா். தா்மருக்கு (அதிமுக) ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதில்: அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் 1,337 நிலையங்கள் மேம்பாட்டுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 77 நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களில் அம்பாசமுத்திரம், அம்பத்தூா், அரக்கோணம், அரியலூா், ஆவடி,பொம்மிடி, செங்கல்பட்டு ஜங்ஷன், சென்னை கடற்கரை, எழும்பூா், பூங்கா, சிதம்பரம், சின்ன சேலம், குரோம்பேட்டை, கோவை ஜங்ஷன், கோவை வடக்கு, குன்னூா், தருமபுரி, திண்டுக்கல் உள்ளிட்டவை அடங்கும்.

டீப் ஃபேக் மோசடியை தடுக்க என்ன நடவடிக்கை?

கேஆா்என். ராஜேஷ்குமாருக்கு (திமுக) மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சா் ஜிதின் பிரசாதா பதில்: தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 -இன்படி உருவாக்கப்பட்ட ஐடி விதிகள்- 2021, பயனா்கள் தங்கள் தளங்களில் சட்டவிரோத உள்ளடக்கத்தை பதிவேற்றவோ, பகிரவோ கூடாது என்பதை உறுதிசெய்கின்றன. இதை மீறினால் ‘பாதுகாப்பான தளம்’ என்ற அந்தஸ்தை இழக்க நேரிடும். அதையும் மீறி பதிவேற்றப்படும் மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்திற்கு அதன் உரிமையாளரே பொறுப்பு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *