நாடாளுமன்ற அவை செயல்பட வேண்டும் என ஆளும் பாஜக அரசு விரும்பவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மக்களவை இன்று காலை கூடியதும், அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதாலும், கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி கேள்வி கேட்டதாலும், பகல் 12 மணி வரை ஒத்திவைத்து அவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
பிறகு, அவை 12 மணிக்குக் கூடியதும் நீதி வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் அவை நடவடிக்கையை தொடர முடியாமல் மீண்டும் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இரு அவைகளும் ஒத்திவைப்பு
காங்கிரஸ் கட்சியினருக்கும் காஷ்மீர் பிரிவினையை ஆதரித்த அறக்கட்டளைக்கும் தொடர்பு இருந்ததாக வெளியான விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று பாஜக உள்ளிட்ட ஆளும்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து அவை நடைபெறாமல் ஒத்திவைப்பது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துடன் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்,
”அவை நடக்க வேண்டும் என எதிர்க்கட்சி விரும்புகிறது. ஆனால் அதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க விரும்புகிறோம். ஆனால், அவையை நடத்த அரசு விரும்பவில்லை என்பது கடந்த 2 – 3 நாள்களின் செயல்பாடுகளில் தெரிகிறது. இன்று மாநிலங்களவையில் நான் பார்த்தது நம்பமுடியாதது. மக்களவைத் தலைவர் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
அரசு 267 நோட்டீஸ் வழங்கியுள்ளது இதுவே முதல்முறை. பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க குரல் எழுப்புவது எதிர்க்கட்சிகளின் ஆயுதம். ஆனால், இதற்கு எதிரான நடவடிக்கைகள் அவையை நடத்த அரசு விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது” எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்