”நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கு நல்லது”: கமல்ஹாசன்  | Kamal Haasan talks on number of members of Parliament 

1353161.jpg
Spread the love

சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கு நல்லது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், ”மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுவரையறை என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ஒடிஸா, மேற்கு வங்கம், ஹிமாச்சல், உத்தராகாண்ட், வட கிழக்கு போன்ற மாநிலங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது என்பதை உணர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினையும், மக்கள் நலனுக்காக கொள்கை முரண்களை ஒதுக்கிவிட்டு இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் தமிழ்நாட்டின் பிற கட்சிகளையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை தீயிலிடப்பட்ட வைக்கோல் போல கருகிவிடும் எனும் வள்ளுவரின் இலக்கணப்படி இந்தத் தேசத்தை ஆபத்து சூழும் முன் நாம் இங்கே குழுமி இருக்கிறோம். இரண்டாண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்தியா டுடே மாநாட்டில் என்னிடம் ‘தொகுதி மறுவரையறை’ பற்றிய கேள்வி எழுப்பப்பட்டபோது தேச வளர்ச்சிக்காக ஒத்துழைத்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படலாகாது என்று சொன்னேன்.

நண்பர்களே, இந்த விவகாரத்தில் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய அம்சங்கள் ஜனநாயகமும், கூட்டாட்சித் தத்துவமும். இந்த இரண்டுமே இரண்டு கண்களைப் போன்றது. இந்த இரு கண்களை வைத்துத்தான் ஒரே பார்வையில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியடைந்த இந்தியா எனும் லட்சியத்தை அடைய முடியும்.

1976-லும் சரி 2001-லும் சரி அப்போது இருந்த இந்தியப் பிரதமர்கள் வெவ்வேறு கட்சிகள், வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் தொகை அடிப்படையிலான பாராளுமன்றத் தொகுதி மறுவரையறையை கையில் எடுக்கவில்லை.

1976-ல் இந்தியா ஒரு பின் தங்கிய நாடாக உலக அரங்கில் கருதப்பட்டது. அப்போது நமது மக்கள் தொகை 55 கோடி. நமது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 543. கடந்த 50 ஆண்டுகளில் நமது மக்கள் தொகை 145 கோடியாக உயர்ந்த போதும், இதே 543 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்போடு நாம் முன்னேறி இருக்கிறோம். ஜனநாயகமும், கூட்டாட்சித் தத்துவமும் தேசிய அளவில் நிலைபெற்றிருக்க இந்த எண்ணிக்கை போதுமானது என்பதையே இது குறிக்கிறது.

ஆகவே மக்களவையிலும் சரி மாநிலங்களவையிலும் சரி தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை என்பதே மக்கள் நீதி மய்யத்தின் கருத்து. தேர்தல் அரசியலில் எந்தக் கூட்டணி வென்று ஆட்சிக்கு வந்தாலும், எங்களது நிலைப்பாடு இதுதான். ஒன்றிய அரசு தீட்டுகிற திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றை பெரும்பாலும் நடைமுறைப்படுத்துவது மாநில அரசுகள்தான். மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரிக்கப்பட வேண்டியது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைதானே தவிர பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அல்ல.

இவையெல்லாம் தவிர, எந்தத் தேவையும் இன்றி பாராளுமன்றத் தொகுதி மறுவரையறை எனும் பேச்சை யார் கிளப்புகிறார்கள்? எந்த நேரத்தில் பேசுகிறார்கள்? எதற்காகப் பேசுகிறார்கள் என்பதும் கவனத்துக்குரியது. மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுகிற, வருடாந்திர பட்ஜெட்டில் தேர்தல் வரவிருக்கிற மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்குகிற, தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதிப்பகிர்வை மறுக்கிற, பேரிடர்க் காலங்களில் நமது கூக்குரலுக்குச் செவி சாய்க்காத, மும்மொழிக் கொள்கை எனும் பெயரில் ஹிந்தியைத் திணிக்கிற, என் பேச்சைக் கேட்டால்தான் நிதி தருவேன் என மிரட்டுகிற ஒரு நடுவண் அரசு யதேச்சதிகாரமாக எடுக்கிற முடிவு இது.

அடுத்து, எந்த நேரத்தில் எடுக்கிறார்கள் என்பதையும் பார்க்கவேண்டும். கரோனாவைக் காரணம் காட்டி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் விட்டு விட்டு அதை 2026-ல் செயல்படுத்துவதன் நோக்கமே தனக்கு சாதகமான களநிலவரம் கொண்ட ஹிந்தி பேசும் மாநிலங்களை ஓரணியில் திரட்டி அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்தலை வெல்வதுதான். நாம் கனவு காண்பது அனைவரையும் உள்ளடக்கிய INDIA. இவர்கள் உருவாக்குவது ‘ஹிந்தியா’. உடையாத பொருளை ஏன் ஒட்ட வைக்க முயற்சிக்கிறீர்கள்? தவிர, நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ஜனநாயகத்தை அடிக்கடி பணிமனைக்கு அனுப்பவேண்டியதும் இல்லை.

எந்த வகையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்தாலும் அதனால் பாதிக்கப்படப் போவது இந்தி பேசாத மக்கள் வாழும் மாநிலங்களே. கூட்டாட்சித் தத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்கும் இந்த முயற்சி தேவையற்றது. இன்றல்ல, நாளையல்ல எப்போதுமே பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் கொண்டு வராமல் இருப்பதே ஜனநாயகத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் இந்தியாவின் பன்மைத்துவத்தையும் காக்கும் என்பதை ஓர் இந்தியனாகவும், தமிழனாகவும், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகவும் வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *