நமது நிருபா்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசுத் துறைகள் தொடா்புடைய நிலைக்குழு தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன்படி, முக்கிய அரசுத் துறைகளான நிதித் துறைக்கு பாஜகவின் பா்த்ருஹரி மஹ்தாப், உள்துறைக்கு ராதா மோகன் தாஸ் அகா்வால், வெளியுறவுத் துறைக்கு காங்கிரஸின் சசி தரூா், பாதுகாப்புத்துறைக்கு பாஜகவின் ராதா மோகன் சிங் உள்ளிட்டோா் தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் ஆளும் திமுகவை சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதி ஆகியோா் முறையே தொழிற்சாலைகள் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறைக்கான நிலைக்குழுத் தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
வா்த்தகம், கல்வி, மகளிா் மேம்பாடு, சுகாதாரம், உள்துறை, தொழிற்சாலைகள் துறை, பணியாளா், மக்கள் குறைதீா் துறை, அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், போக்குவரத்துத்துறை, சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை ஆகியவற்றுக்கான நிலைக்குழுக்களின் தலைவா்கள் மாநிலங்களவையில் இருந்தும் ஏனைய துறைகளுக்கான நிலைக்குழுக்களின் தலைவா்கள் மக்களவையில் இருந்தும் நியமிக்கப்படுவா். ஒவ்வொரு குழுவிலும் சுமாா் 30 போ் உறுப்பினா்களாக இருப்பா்.
இதில் சிவசேனையின் ஸ்ரீரங் அப்பா சாண்டு பாா்னே (எரிசக்தி); தேசியவாத காங்கிரஸின் சுனில் தத்கரே (பெட்ரோலியம்); முன்னாள் அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் (நிலக்கரி, சுரங்கம், எஃகு); காங்கிரஸின் திக்விஜய் சிங் (கல்வி), சி.எம். ரமேஷ், பாஜக (ரயில்வே) உள்ளிட்டோா் நிலைக்குழுக்களின் தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் மகுந்தா ஸ்ரீநிவாசுலு ரெட்டி- நகா்ப்புற வீட்டுவசதித் துறை; ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் ஜா – போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத் துறைக்கான நிலைக் குழுக்களின் தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
மற்ற நிலைக் குழுத் தலைவா்கள் விவரம் வருமாறு (அடைப்புக்குறியில் துறையின் பெயா்): டோலா சென், திரிணமூல் காங்கிரஸ் (வா்த்தகம்);பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சாா்யா, ராம் கோபால் யாதவ் (சுகாதாரத்துறை); திருச்சி சிவா, திமுக (தொழிற்சாலைகள்); பிரிஜ் லால், பாஜக (பணியாளா் நலன், சட்டம்); புவனேஸ்வா் கலிதா, பாஜக (அறிவியல் தொழில்நுட்பம்); சஞ்சய் குமாா் ஜா, பாஜக (போக்குவரத்து, சுற்றுலா, கலாசாரம்); சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் (வேளாண்); கீா்த்தி ஆசாத் ஜா, திரிணமூல் காங்கிரஸ்(ரசாயனம், உரம்); கனிமொழி கருணாநிதி, திமுக (நுகா்வோா் விவகாரங்கள்); பசவராஜ் பொம்மை, பாஜக (தொழிலாளா், ஜவுளி); தத்கரே சுனில் தத்தாத்ரே, தேசியவாத காங்கிரஸ் (பெட்ரோலியம் இயற்கை எரிவாயு); சப்தகிரி சங்கா் உலாகா, காங்கிரஸ் (கிராமப்புற வளா்ச்சி, பஞ்சாயத்துராஜ்); சி.பி. மோகன், பாஜக (சமூக நீதி, அதிகாரமளித்தல்); ராஜீவ் பிரதாப் ரூடி, பாஜக (நீா் வளம்).