“நாடு முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரிப்பு” – துரை வைகோ எம்.பி கருத்து | drug use increased all over india says durai vaiko

1306830.jpg
Spread the love

ராமநாதபுரம்: “நாடு முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது” என துரை வைகோ எம்பி தெரிவித்தார்.

பரமக்குடியில் திருமண விழா ஒன்றில் இன்று (செப்.5) பங்கேற்ற மதிமுக தலைமை கழகச் செயலாளரும், எம்பியுமான துரை வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “கடந்த 40 ஆண்டுகளாக தமிழக மீனவர்களை தாக்குவதும், அவர்களை கடத்திச் சென்று இலங்கை சிறையில் அடைப்பதும், சிறையில் சித்திரவதை செய்வதும், மீனவர்களின் வலை, படகு இயந்திரம், உடமைகளை பறிப்பதும் தொடர்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் 6 ஆயிரம் மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 500 மீனவர்கள் இறந்துள்ளனர். தற்போது இலங்கை கடற்படை தாக்குதல் அதிகரித்துள்ளது.

கடந்த 8 மாதங்களில் 320-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்கப்பட்டு, கைது செய்து இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 180-க்கும் மேற்பட்ட படகுகளை சிறைபிடித்து இலங்கை அரசு நாட்டுடமையாக்கியுள்ளது. சமீபத்தில் 22 மீனவர்களை கைது செய்துள்ளது. அதில் 12 மீனவர்களை விடுவிக்க தலா ரூ. 98 லட்சம் ஒவ்வொரு மீனவரும் அபராதம் செலுத்த வேண்டும், இல்லையேல் மேலும் 6 மாதம் சிறை என இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க செல்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் வயிற்று பிழைப்பிற்காக மரண பயத்துடன் மீன் பிடிக்கின்றனர். வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்தில் மீன்பிடித் தொழிலை நம்பி பெரும்பாலான மக்கள் உள்ளனர். இதனால் மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மீனவர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் இலங்கை நீதிமன்றம் விதிக்கிறது. மீனவர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதே மீனவர்களின் முக்கிய கோரிக்கை. ஆனால் கச்சத்தீவை ஒருபோதும் இலங்கை அரசு கொடுக்காது என்றே தெரிகிறது. கச்சத்தீவு ஒப்பந்தம் நீர்த்து போய்விட்டது. இலங்கை அரசிடம் மத்திய அரசு பேசி மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவியாகவே உள்ளார். தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு புகுத்துகிறது. ஆனால் நாம் மாநில கல்விக் கொள்கை போதும் என்கிறோம். மாநில பாடத்திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு சமமாகவும், அதைவிட கூடுதலாகவும் உள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் கல்வியில் முன்மாதிரி மாநிலமாக நாம் உள்ளோம். போதைப்பொருள் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வருகிறது. அதேபோல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. நாடு முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. தமிழக அரசும் போதைப்பொருட்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது” என தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *