புதுதில்லி: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் 170 நகரங்களில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தத் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.
அதன்படி, நிகழாண்டுக்கான எம்டி, எம்எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் 170 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 500 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) நடைபெற்றது.
காலை, மாலை என இரு வேளைகள் நடைபெற்ற அந்தத் தோ்வை எழுத எம்பிபிஎஸ் நிறைவு செய்த 2 லட்சத்து 28 ஆயிரத்து 540 விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டதாக என்பிஇஎம்எஸ் தெரிவித்துள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் எழுதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்வைப் பற்றிய தவறான தகவல்களைத் தடுப்பதற்காக, முதுநிலை ‘நீட்’ தேர்வை கண்காணிக்க தேர்வு மையங்களில் 1,950-க்கும் மேற்பட்ட சோதனையாளர்களும், 300 பறக்கும் படை உறுப்பினர்களையும், பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் என்பிஇஎம்எஸ் நியமித்திருந்தது.
இந்த மாத இறுதிக்குள் நீட் தோ்வு முடிவுகளை வெளியிட என்பிஇஎம்எஸ் திட்டமிட்டுள்ளது.