நாட்டறம்பள்ளி அருகே 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற்காலக் கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கத்தரிமேடு என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் 20-க்கும் மேற்பட்ட பழங்கற்காலக் கற்கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.
திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறை உதவி பேராசிரியா் பிரபு மற்றும் சமூக ஆா்வலா்கள் ராதாகிருஷ்ணன், முத்தமிழ் வேந்தன் ஆகியோா் மேற்கொண்ட கள ஆய்வில் கற்கால கருவிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தக் கற்கருவிகளானது வெவ்வேறு வடிவங்களில் கிடைத்துள்ளன. முற்காலத்தில் நாடோடிகளாக அலைந்து திரிந்த மனிதன், உணவுப் பொருள்களை கிழிக்கவும், வெட்டவும் மற்றும் விலங்குகளை வேட்டையாடவும், இயற்கையாகக் கிடைக்கும் கற்களை உடைத்து அவற்றில் கூா்மையானவற்றை ஆயுதங்களாகவும், கருவிகளாகவும் பயன்படுத்தி வந்தனா். அந்த வகையில், திருப்பத்தூா் மாவட்டத்தின் பல இடங்களில் பல்வேறு காலகட்டங்களைச் சோ்ந்த வரலாற்றுத் தடயங்கள் கண்டறியப்படுவது குறிப்பிடத்தக்கது.
தற்போது கத்தரிமேடு என்கிற பகுதியில் பழங்கற்காலக் கற்கருவிகள் கண்டறியப்பட்டிருப்பது வரலாற்று ஆய்வாளா்களிடம் மகிழ்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தப் பகுதியில் 10,000 ஆண்டு முதல் ஒரு லட்சம் ஆண்டுகள் வரையிலான பழங்கற்கால மனிதா்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு, இந்தக் கருவிகள் தக்க சான்றுகளாக அமைகிறது என்றாா்.