சிவகங்கை மாவட்டம் நாட்டாங்குடி கிராமத்தில் ஒரு காலகட்டத்தில் கிட்டத்தட்ட 60 குடும்பங்களுக்கும் மேல் வசித்து வந்தனர்.
ஆனால் பாதுகாப்பின்மை, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் பொதுமக்கள் அந்த கிராமத்தில் இருந்து வெளியேறி வேறு கிராமங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.
ஆனால் தங்கராஜ் என்ற சாமியார் மட்டும் இந்தக் கிராமத்தில் சில வருடங்களாக தனியாக வசித்து வந்தார்.

நாட்டாங்குடி கிராமம்
ஆனால் தற்போது திருச்செல்வம் என்ற சமூக ஆர்வலர், மாவட்ட நிர்வாகம், அந்த கிராம மக்கள், இளைஞர்களை இணைந்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து நாட்டாங்குடி கிராமத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனால் மீண்டும் இந்தக் கிராமத்திற்கு மக்கள் குடிபெயர ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில் கிராமத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கிய சமூக ஆர்வலர் திருச்செல்வத்தைத் தொடர்புகொண்டு பேசினோம்.
வழிகாட்டிய சமூக ஆர்வலர்
நம்மிடம் பேசிய அவர், “ நான் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். சாப்ட்வேர் இன்ஜினியர்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு டீம்மாக செயல்படுகிறோம்.
ஐடி (தகவல் தொழில்நுட்பம்) துறையை நல்ல விதமாக விவசாயத்துக்கு பயன்படுத்திக்கொள்வது தான் எங்கள் நோக்கம்.
23 வருடங்களாக இந்தப் பணியை நாங்கள் செய்துவருகிறோம். தகவல் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டை கிராம அளவில் செயல்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்.

முன்னேறிய வேப்பங்குளம் கிராமம்
கிராமங்களில் உள்ள விவசாயிகள், திட்டமிடுதலில் இருந்து பொருட்களை விற்பது வரை விவசாயம் தொடர்பான எல்லா வேலைகளையும் கிராமத்திலேயே செய்துகொள்ள முடியும் என்ற ஒரு கான்சப்ட்டை உருவாக்கி அதனை ஆந்திராவில் உள்ள சில கிராமங்களில் செயல்படுத்தினோம்.
ஒரு சில காரணங்களால் இதனை அங்கு தொடர முடியவில்லை. மனம் தளராமல் 2017-ல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளம் கிராமத்தின் வருவாயை இரட்டிபாக முயன்றோம்.
அந்த கிராம மக்களுக்கு சில விஷயங்களை எடுத்து சொல்லி வழிகாட்டினோம். அவர்களின் நிதி பங்களிப்புடனே அங்குள்ள நீர்நிலைகளை சரி செய்தோம்.

உழவர் உதவி மையம்
அதன் விளைவாக இன்று விவசாயத்தில் அந்தக் கிராமம் தன்னை முழுவதுமாக மீட்டெடுத்திருக்கிறது. நீர் மேலாண்மை மட்டுமன்றி, விவசாய மேலாண்மை, பயிர் மேலாண்மை ஆகியவற்றோடு சந்தைப்படுத்துதலிலும் சிறந்து விளங்குகிறது.
இதன் தொடர்ச்சியாக அந்த கிராமத்திற்கு கடந்த 2021-23-ஆம் ஆண்டு உழவர் உதவி மையத்தை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்தது.
அதன் மூலம் அந்த மண்ணில் விளையக்கூடிய மாம்பழம், நார்த்தம்பழம், எலுமிச்சம்பழம் போன்ற விளைபொருட்களை 24 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் கூரியர் மூலமாக நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பை அந்தக் கிராமம் பெற்றது.

தடுமாறிய நாட்டாங்குடி கிராமம்
இப்படி தமிழ்நாட்டில் உள்ள சில கிராமங்களை மீட்டெடுத்திருக்கிறோம். ஒரு நாள் இந்த நாட்டாங்குடி கிராமத்தை பற்றி கேள்விப்பட்டோம்.
என்னென்ன காரணங்களுக்காக அங்குள்ள மக்கள் குடிபெயர்ந்தார்கள் என்பதை முதலில் நாங்கள் தெரிந்து கொண்டோம்.
5 மாதங்களாக அந்தக் கிராமத்தில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய முயற்சி செய்தோம்.
மக்களிடம் கிராமத்தில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக பேசினோம். ஆடு, மாடு, பன்றி தொந்தரவால் விவசாயம் செய்ய முடியவில்லை என்று சொன்னார்கள்.
அதனால் வேலி அமைத்துகொடுத்தோம்.
மீண்டெழுந்த நாட்டாங்குடி கிராமம்
பிறகு அங்கு நடந்த குற்றச் சம்பவங்களால் மக்கள் பயந்து கிராமத்தை விட்டு வெளியேறியதால் தற்போது சிசிடிவி அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.
தவிர நீர் வசதிக்காக பாசன வாய்க்கால்களை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்தது.
மழை பெய்ததால் கண்மாய் முழுவதும் இப்போது தண்ணீர் இருக்கிறது. பூசணி, பரங்கி, தர்பூசணி உளுந்து எல்லாம் விதைத்திருக்கிறார்கள்.

100 ஏக்கரில் இந்த வருடம் 40 ஏக்கரிலாவது விவசாயம் நடக்கும். நாட்டாங்குடி கிராமத்தை விட்டு வெளியேறிய கிராம மக்கள் மீண்டும் குடிபெயர ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒரு கிராமம் தடுமாறியது என்பது உண்மை. ஆனால் தடுமாறிய இந்த நாட்டாங்குடி கிராமம் பல கிராமங்கள் தடுமாறாமல் இருப்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும்” என்று நம்பிக்கையுடன் பேசினார்.!