சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிக்கும் காசிக்கும் தொடர்பு உள்ளது என ஆளுநர் தெரிவித்தார். சென்னை ஐஐடி வளாகத்தில் காசி தமிழ் சங்கமம் 4.0 குறித்த விளக்க நிகழ்ச்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: காசி தமிழ் சங்கமம் என்பதுபிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை. இந்தியாவில்உள்ள அனைத்து பகுதிக்கும்காசிக்கும் தொடர்பு உள்ளது.காசி இந்தியாவின் ஆன்மிக தலைநகரம்.
காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வை நடத்துவது சாதாரண காரியம் கிடையாது. மக்களை தேர்வு செய்து அழைத்துச் செல்வதென்பது கடினமான பணி. இதை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி சிறப்பாக செய்து கொண்டுள்ளார். கலாச்சாரம் என்பது அரசால் நடத்துவது அல்ல. இது மக்கள் உணர்வால் எழுவது. இதை அரசியல்படுத்த வேண்டாம்.
இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் விழா, ‘தமிழ் கற்கலாம்’ எனும் தலைப்பில் நடத்தப்படுகிறது. 300 உத்தரப் பிரதேச மாணவர்கள் தமிழகம் வந்து தமிழ் பயில உள்ளனர். வேறு மாநில மக்களை தமிழ் படிக்க வைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அசாமில் இருந்து வந்த மாணவர்களுக்கு ராஜ்பவனில் தமிழ் சொல்லிக் கொடுத்தோம். தமிழ் மிக பழமையான மொழி. தமிழை அனைத்து இந்திய மக்களிடமும் கொண்டு சேர்த்து வருகிறோம்.
மார்கழி விழாவுக்கு சென்னை நகர சபாக்கள் தயாராகி வருகின்றன. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது அரசியல் வாக்கியம் என நினைக்க வேண்டாம். இந்த வாக்கியம் உணர்வு பூர்வமானது. பாரதம் என்பது ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட புண்ணிய தேசம். நமது கலாச்சார தொடக்கம், நாம் இழந்ததை பெறுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஆளுநர் பேசினார். இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவர் சுதா சேஷையன், நிறுவன இயக்குநர் சந்திரசேகரன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.