சென்னை: நாட்டிலேயே வருவாய் ஈட்டுவதில் சென்ட்ரல் ரயில் நிலையம் 3-வது இடத்தை பெற்றுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களின் தரிவரிசைப் பட்டியலை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரயில்வே வாரியம் வெளியிட்டு வருகிறது. ரயில் நிலையங்களுக்கான கடந்த நிதி ஆண்டு தரவரிசைப் பட்டியலை சமீபத்தில் வாரியம் வெளியிட்டது.
இந்த பட்டியலில், புதுடெல்லி ரயில் நிலையம் அதிகபட்சமாக 3.93 கோடி பயணிகளை கையாண்டு ரூ.3,337 கோடி வருவாயை ஈட்டி முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஹவுரா ரயில் நிலையம் 6.13 கோடி பயணிகளை கையாண்டு ரூ.1,692 கோடி வருவாயை ஈட்டி 2-வது இடத்தில் உள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 3.05 கோடி பயணிகளை கையாண்டது. இதன்மூலமாக ரூ.1,299 கோடி வருவாயை ஈட்டி 3-வது இடத்தை பிடித்துள்ளது.
தொடர்ந்து, புறநகர் ரயில் நிலையங்களுக்கான பட்டியலில் மும்பை ரயில் நிலையங்கள் முதல் இடத்திலும், சென்னை புறநகர் ரயில் நிலையங்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதேபோல, தமிழகத்தில் உள்ள 541 ரயில் நிலையங்களின் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் பட்டியலை வெளியிட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தை தொடர்ந்து, எழும்பூர், தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, காட்பாடி நிலையங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் தென் மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில் போக்குவரத்து மையமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இருக்கிறது. இங்கிருந்து புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு தினசரி 200-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வெளியூர் மற்றும் புறநகர் ரயில்களை இயக்கும் வகையில், 17 நடைமேடைகள் உள்ளன.
தினசரி 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். வரும் ஆண்டுகளில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்திட, ரயில்வே புதிய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.