1739 ஆம் ஆண்டு, இந்தியாவின் செல்வ வளத்தின் மீது ஆசை கொண்ட நாதிர் ஷா, முகலாயப் பேரரசர் முகமது ஷா மீது படையெடுத்து அவரை கர்னால் போரில் எளிதாகத் தோற்கடித்தார். டெல்லியை முழுமையாகச் சூறையாடி, ஷாஜகானால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற ‘மயில் சிம்மாசனத்தை’ (Peacock Throne) கைப்பற்றினார். இந்தச் சிம்மாசனத்தில்தான் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டிருந்தது என்றும், அதை அவர் பெயர்த்து எடுத்தார் என்றும் ஒரு வரலாறு கூறுகிறது.

ஆனால், மிகவும் பிரபலமான இன்னொரு செவிவழிக் கதையும் இந்த வரலாற்றுக்கு உண்டு:
முகமது ஷா தன்னிடம் இருந்த விலைமதிப்பற்ற அந்த வைரத்தை நாதிர் ஷாவிடம் சிக்காமல் இருக்க, தனது தலைப்பாகைக்குள் (Turban) மறைத்து வைத்திருந்தார். இதைப் பற்றி ஒரு ரகசிய ஒற்றர் மூலம் நாதிர் ஷாவுக்குத் தெரியவந்தது. அதை பலவந்தமாகப் பறிக்காமல் ஒரு தந்திரம் செய்தார் நாதிர் ஷா. சமாதானம் பேசுவது போல் முகமது ஷாவை அழைத்த அவர், “நமது நட்பின் நிரந்தர அடையாளமாக, நமது தலைப்பாகைகளை மாற்றிக்கொள்வோம்” என்று கூறினார். மன்னர் மரபுப்படி இதை மறுக்க முடியாத முகமது ஷா, வேறு வழியின்றி தனது தலைப்பாகையை நாதிர் ஷாவிடம் கொடுத்தார். கூடாரத்திற்குச் சென்று தலைப்பாகையைப் பிரித்துப் பார்த்த நாதிர் ஷா, அதிலிருந்த பிரம்மாண்ட வைரத்தின் ஒளியைக் கண்டு வியந்து, `கோஹ்-இ-நூர்’ (Koh-i-Noor) என்று சத்தமிட்டார். பாரசீக மொழியில் இதற்கு `ஒளியின் மலை’ என்று அர்த்தம். அன்று அவர் வைத்த பெயர்தான் இன்றுவரை நிலைத்து நிற்கிறது.