“நானே அறிவாலயம் வெளியே நின்றால் தொகுதியில் எப்படி மதிப்பார்கள்'' -திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆடலரசன்

Spread the love

திருத்துறைப்பூண்டி முன்னாள் திமுக எம்.எல்.ஏ ஆடலரசன். இவர் திமுக-வில் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்றுள்ளார். அங்கிருந்த பலர் முதல்வரை சந்தித்துள்ளனர். ஆனால் ஆடலரசனை அனுமதிக்கவில்லை என்கிறார்கள்.

இதில் ஆவேசமடைந்த ஆடலரசன், “நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னை உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்களானு சத்தமாக கேள்வி எழுப்பியதுடன், தனது முன்னாள் எம்.எல்.ஏ அடையாள அட்டையையும் தூக்கி வீசினார். இந்த சம்பவம் அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேசு பொருளாகியிருக்கிறது.

ஆடலரசன் திமுக முன்னாள் எம்.எல்.ஏ
ஆடலரசன் திமுக முன்னாள் எம்.எல்.ஏ

இது குறித்து ஆடலரசனிடம் பேசினோம், நான் 2016-2021 திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. தற்போது கட்சியில் தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். என் நண்பரின் விசா விஷயம் தொடர்பாக சென்னை சென்றிருந்தேன்.

அப்போது அண்ணா அறியவாலயத்தில் தலைவர் முதல்வர் பார்வையாளர்களை சந்திப்பதாக கேள்வி பட்டேன். உடனே அறிவாலயத்திற்கு சென்றேன்.

சமீபத்தில் பெய்த மழையில் எங்க தொகுதியில் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பெண்களாக இருந்தாலும் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நின்று டிஜிட்டல்ஆப் மூலம் போட்டோ எடுத்து கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

விவசாயிகள் டிஜிட்டல் முறையை கைவிட்டு பழைய முறைப்படி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதே போல் ரேஷன் கார்டுக்கு 5 ஏக்கர் என நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காத நிலை ஏற்படும். ஆதார் கார்டு அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும் முன்னாள் எம்.எல்.ஏ என்கிற முறையில் என்னிடம் தொகுயில் கோரிக்கை வைத்தனர்.

முதல்வரை சந்தித்து ஆசி வாங்கி விட்டு, தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் முதல்வரிடத்தில் சொல்லி விட்டு வரலாம் என அறிவாலயம் சென்றேன்.

திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி

அங்கு சுமார் 50 பேர் வரை இருந்தனர். பூச்சி முருகன் ஒவ்வொருவரையும் உள்ளே அனுப்பி பார்க்க வைத்தார். நான், முதல்வரை பார்க்கணும் என்றேன், பர்த் டே, திருமண நாளில் தான் பார்க்க முடியும் இப்போது முடியாது என்றார்.

முதல்வரை பார்த்து ஆசி வாங்கிட்டு போயிடுறேன் நான் முன்னாள் எம்.எல்.ஏ என அடையாள அட்டையை காட்டினேன். ஆனால் மறுத்த அவர் இங்கே நிற்க கூடாதுனு வெளியே போக சொன்னார். என் கண் முன்னாலேயே மற்றவர்களை முதல்வரை பார்க்க உள்ளே அனுமதித்தார்.

இதை பார்த்த எனக்கு எமோசனல் ஆகிவிட்டது. உடனே, நான் ஏன் அறிவாலயத்தில் நிற்க கூடாது, பட்டியலின சாதியை சேர்ந்தவன் என்பதால் உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்களானு கேட்டு விட்டு, என்னோட அடையாள அட்டையை வீசிவிட்டேன்.

அப்போது முதல்வர் வெளியே வந்து விட்டார். இதையடுத்து உள்ளே சென்று, தொகுதி பிரச்னைகளை சொல்லி விட்டு ஆசி வாங்கிட்டு வந்துட்டேன். எல்லாத்தையும் சரி செய்யலாம், மக்களின் குறைகளை தீர்த்து வைப்போம் என்ற முதல்வர் அன்பாக பேசி என்னை அனுப்பி வைத்தார்.

ஆனால், பூச்சி முருகன், சி.எம்யை கண்ட்ரோலில் வைத்திருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக இப்படி நடந்து கொண்டுள்ளார் என நினைக்கிறேன்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

கஜா புயல், கொரோனா பரவல் கால கட்டங்களில் கடுமையாக உழைத்திருக்கிறேன். 50 லட்சம் வரை கடனில் உள்ளேன். அடகு வைத்த நகைக்கு வட்டி கட்டி வருகிறேன். அரசு ஒப்பந்த பணிகள் உள்ளிட்ட எதற்காகவும் யாரிடமும் நின்றதில்லை.

நானே அறியவாலயத்தில் வெளியே நின்றால் தொகுதி மக்கள் எப்படி என்னை மதிப்பார்கள். இந்த ஆதங்கத்தை நான் வெளிப்படுத்தினேன். எனக்கு தலைவர் முக்கியம், அவர் மீண்டும் முதல்வராக ஆக வேண்டும். இதற்காக என் வேலையை சரியாக செய்து உழைத்து வருகிறேன். எதுவாக இருந்தாலும் புரோட்டாகால் பின் பற்றுங்கள், பதவிக்கு மரியாதை கொடுங்கள் என்பது தான் என் வேண்டுகோள்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *