`நான் இஸ்ரோ விஞ்ஞானி’- 50 பெண்களிடம் திருமண ஆசைகாட்டி பண மோசடி; கோவாவில் சூதாட்டம்… சிக்கிய இளைஞர்

Spread the love

தற்போது மேட்ரிமோனியல் தளங்களில் இருக்கும் பெண்களின் தகவல்களை எடுத்து அப்பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி செய்வது அதிகரித்து இருக்கிறது. மும்பை அருகில் உள்ள நவிமும்பை ரபாலே பகுதியை சேர்ந்த பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவருக்கு ஸ்வப்னில் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. ஸ்வப்னில் தன்னை இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருப்பதாக சொல்லிக்கொண்டார். பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் மேட்ரிமோனியல் தளத்தில் திருமண வரனுக்காக பதிவு செய்து வைத்திருந்தார். அதிலிருந்து தகவல்களை எடுத்து பெண் சாப்ட்வேர் எஞ்சினியரை ஸ்வப்னில் தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்கள் இருவரும் பழகியதில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்கு முன்பு சொந்த ஊரான சூரத்தில் நமது எதிர்காலத்திற்காக நிலம் வாங்கப்போவதாக பெண் சாப்ட்வேர் எஞ்சினியரிடம் தெரிவித்தார். அதோடு வங்கியில் கடன் வாங்கி ரூ.20 லட்சம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அப்பெண்ணும் எதிர்கால கணவர் என்ற நம்பிக்கையில் ரூ.20 லட்சத்திற்கு வங்கியில் கடன் வாங்கி அதனை ஸ்வப்னிலிடம் கொடுத்தார்.

இது தவிர இரண்டு பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உறவு வைத்துக்கொண்டனர். பணம் கைக்கு வந்தவுடன் ஸ்வப்னில் பெண் சாப்ட்வேர் எஞ்சினியரை புறக்கணிக்க ஆரம்பித்தார். இதையடுத்து அப்பெண் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதில் அலிபாக் பகுதியை சேர்ந்த ஆதர்ஷ் மாத்ரே(34) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் அதிர்ச்சித்தகவல்கள் கிடைத்துள்ளது. இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் குஞ்சால் கூறுகையில்,”‘ஆதர்ஷ் மாத்ரே வெறும் 10வது வகுப்பு மட்டும் தான் படித்துள்ளார். சில நேரங்களில் விஞ்ஞானி என்றும், மற்ற சமயங்களில் மூத்த பொதுப்பணித்துறை அதிகாரி என்றும், பொறியாளர் என்றும் காட்டிக் கொண்டு திருமண வலைத்தளங்கள் மற்றும் டேட்டிங் செயலிகளில் படித்த, பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கும் பெண்களை குறிவைத்து திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார்.

இதற்காக 12 போலி அடையாள ஐ.டிகளை உருவாக்கி, போலி ஆதார் அட்டைகள் மற்றும் போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற்று நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் எதிர்காலத்திற்கு சொத்து வாங்கவேண்டும் என்று கூறி சம்பந்தப்பட்ட பெண்களிடம் கடன் வாங்கும்படி வற்புறுத்துவார். அப்பெண்கள் கடன் வாங்கியவுடன் அதனை அப்பெண்ணிடம் தனது உறவினர் ஒருவரின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்வார். அந்த பணத்தை பின்னர் கோவாவில் சூதாட்டத்தில் செலவிட்டுள்ளார்.

அலிபாக்கில் வசிக்கும் ஆதர்ஷ் மாத்ரே மீது மும்பை, நவி மும்பை, தானே, ராய்காட் மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்ததாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்ப சூழ்நிலை கருதியும், சமூக அந்தஸ்து கருதியும் புகார் கொடுக்க தயங்குகின்றனர். ஆனால் மாத்ரே 50 பெண்களை ஏமாற்றி ரூ.1 கோடி வரை மோசடி செய்து இருக்கலாம் என்கிறார்கள்.

ஆதர்ஷ் பொறியாளர்கள், மருத்துவர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் போன்ற பணியில் இருக்கும் பெண்கள், விதவைகள் மற்றும் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ளவர்களை குறிவைத்து இது போன்று ஏமாற்றி இருக்கிறார். ஆதர்ஷ் மற்றும் இந்த மோசடிக்கு துணை போன அவரின் உறவினர் பிரேம் மாத்ரே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *