“நான் எப்போதும் மக்கள் கடலோடு இருப்பதைப் பார்த்த எதிரிகள்…” – அரியலூரில் விஜய் பேச்சு | BJP betrays DMK breaches trust tvk leader thalapathy Vijay in Ariyalur

1376385
Spread the love

அரியலூர்: ‘பாஜக செய்வது துரோகம்; திமுக செய்வது நம்பிக்கை மோசடி’ என மத்திய மற்றும் மாநில அரசை அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது தவெக தலைவர் விஜய் சாடினார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது முதல் பிரச்சாரப் பயணத்தை திருச்சியில் சனிக்கிழமை காலை தொடங்கினார். திருச்சியில் மதியம் 3 மணி அளவில் விஜய் பேசினார். மைக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவரது உரையை முறையாக கேட்க முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும் தனது உரையை முடித்துக் கொண்டு திருச்சியில் இருந்து அரியலூர் புறப்பட்டார். சனிக்கிழமை இரவு 8.45 மணி அளவில் அவரது பிரச்சார வாகனம் அரியலூர் வந்தடைந்தது. அரியலூரில் உள்ள அண்ணா சிலை முன்பு திரண்டிருந்த தவெக தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் விஜய் பேசினார்.

“எல்லோருக்கும் வணக்கம். மன்னித்து விடுங்கள் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. திருச்சியில் பேசிய போது மைக்கில் கோளாறு ஏற்பட்டது. அதனால் அங்கு பேசியதை இங்கு மீண்டும் பேசுகிறேன். அந்த காலத்துல போருக்கு போகுறதுக்கு முன்னாடி போர்ல ஜெயிக்க குலதெய்வம் கோயிலுக்கு சென்று சாமியை கும்பிட்டு விட்டுதான் போருக்கு செல்வார்களாம். அது மாதிரி அடுத்த வருஷம் நடக்க இருக்குற ஜனநாயக போருக்கு தயாராவதற்கு முன்னாடி மக்களை பார்த்துவிட்டு போகலாம் என வந்துள்ளேன்.

என்னை இங்கு பார்க்க வந்துள்ள அம்மாக்கள், சகோதரிகள், அண்ணன்கள், தம்பிகள் என உங்கள் எல்லோரது அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எறிந்து விட்டு வரலாம். உங்கள் அன்பு, பாசத்தை விட எனக்கு வேறு எதுவும் பெரிதாக தெரியவில்லை. உங்கள் வீட்டில் ஒருவனாக என்னை பார்க்கிறீர்கள். அரசியலுக்கு வந்து தான் நான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது இல்லை. உங்களுக்காக உழைக்குறத தவிர வேறு வேலை இல்லை.

நான் தனி ஆளாக இருப்பேன் என பார்த்தார்கள். ஆனால், நான் எப்போதும் மக்கள் கடலோடு இருப்பதை பார்த்த எதிரிகள் நம்மை பற்றி கடுமையாக பேச ஆரம்பித்துள்ளார்கள். நான் மரியாதையாக பேசினால் கூட அதை தவறாக பார்க்கிறார்கள். அதனால் யார் என்ன சொன்னாலும் அண்ணா அவர்கள் சொன்ன வார்த்தைகள் தான். ‘வாழ்க வசவாளர்கள்’ என சொல்லி கடந்து போக வேண்டியதுதான்.

நம்மை மிக மோசமாக ஆட்சி செய்து கொண்டுள்ள பாசிச பாஜக அரசு, பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்க நான் வந்துள்ளேன். இந்த பாஜக அரசு நம்மை கொடுமை படுத்துகிறது. பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் காணாமல் போயுள்ளனர். இது அனைத்துக்கும் மேலாக வாக்கு திருட்டில் பாஜக ஈடுபடுகிறது. இதற்கும் மேலாக மாநில அரசுகளை கலைத்து விட்டு ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கும் ஐடியாவையும் கொண்டுள்ளது. அப்போதுதான் தில்லுமுல்லு வேலைகளை திறம்பட செய்ய முடியும்.

இதற்கு அடுத்து மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை. இதன் கீழ் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். இதை தவெக தொடர்ந்து எதிர்க்கும். அதனால் வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பணி, ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு என எதிர்க்கட்சிகளை அழிக்கும் பணி. இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பாஜக செய்யும் துரோகம்.

சரி, பாஜகதான் துரோகம் செய்கிறது என்று பார்த்தால் இங்கு திமுக அரசு நம்மை நம்ப வைத்து மோசடி செய்கிறார்கள். 505 வாக்குறுதிகளை கடந்த தேர்தலின் போது திமுக அறிவித்தது. அதில் முக்கால் வாசி வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. ஆனால், வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்.

சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவதாக சொன்னீர்களே செய்தீர்களா? அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் தருவதாக சொன்னீர்களே செய்தீர்களா? இப்படி சொன்னது எதையும் ஆளும் திமுக அரசு செய்யவில்லை. அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சரி நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என கேட்கிறீர்கள். தீர்வை நோக்கி செல்வதும், தீர்வு காண்பது மட்டும்தான் தவெக-வின் லட்சியம். நமது தேர்தல் அறிக்கையில் இதை தெளிவாக சொல்வோம். அதனால் பொய்யான வாக்குறுதிகளை தர மாட்டும். நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதியாக தருவோம். மருத்துவம், குடிநீர், கல்வி, ரேஷன், அடிப்படை வசதிகளான சாலை வசதி, மின்சார வசதி, பெண் பாதுகாப்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

எளிதாக நமது பார்வை என்னவென்று சொல்ல வேண்டுமென்றால் ஏழ்மை மற்றும் வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மற்றும் மனசாட்சி உள்ள மக்களாட்சி. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என விஜய் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *