'நான் ஐ.ஏ.எஸ் பேசுறேன்'னு சொன்னேன்… அம்மா அழுதாங்க.!"- யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற மௌலீஸ்வரன்

Spread the love

இந்த சக்சஸ் என்னோடது மட்டுமில்லை சார்… அம்மாவுக்கும் இதுல நிறைய பங்கிருக்கு. ஐ.ஏ.எஸ் ஆகணும்ங்கிறது அவங்க கனவு. நானாவது அதை எட்டிப்பிடிக்கணும்னு நினைச்சாங்க.  நான் கருவுல இருக்கிற காலத்துல இருந்து ‘நீ ஐ.ஏ.எஸ் ஆகணும்’னு சொல்லிக்கிட்டே இருப்பாங்களாம்.

நான் வளர்ந்த பிறகும்கூட என்னை அழைக்கும்போது, ‘மௌலீஸ்வரன் ஐ.ஏ.எஸ்’ன்னு தான் அழைப்பாங்க. எவ்வளவு கஷ்டங்கள் வந்தபோதும் அம்மாவோட கனவை விட்டுடக்கூடாதுன்னு உறுதியா நின்னு போராடுனேன். ரிசல்ட் வந்தன்னிக்கு அம்மாவுக்குப் போன் பண்ணி ‘நான் மௌலீஸ்வரன் ஐ.ஏ.எஸ் பேசுறேன்’னு சொன்னேன்… அம்மா அழுதாங்க…” – சொல்லும்போதே மௌலீஸ்வரனின் கண்கள் கலங்குகின்றன.

மௌலீஸ்வரனின் குடும்பம்
மௌலீஸ்வரனின் குடும்பம்

திருத்தணி அருகில் உள்ள கீழாந்தூரைச் சேர்ந்த மௌலீஸ்வரன், இந்தாண்டு யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 410வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றிருக்கிறார். கூடுமானவரை அவருக்கு ஐ.ஏ.எஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.  

“அப்பா தமிழ்நாடு சேமிப்புக் கிடங்குல ரீஜனல் மேனேஜராக இருக்கிறார். அம்மா பேரு சரஸ்வதி. தையற்கலை ஆசிரியரா இருக்காங்க. டியூசன், அன்னதானம்னு எங்க பகுதியில நிறைய சேவைகள் பண்ணுவாங்க. தங்கை நிப்ட்ல பேஷன் டிசைனிங் படிக்கிறா. நான் சிறு வயதிலிருந்தே ‘ஐ.ஏ.எஸ்’, ‘ஐ.ஏ.எஸ்’-ன்னு தான் கேட்டு வளர்ந்தேன்.

டென்த், பிளஸ்டூவுல எல்லாம் நல்ல மார்க். என் மார்க்குக்கு எம்.பி.பி.எஸ் கூட கிடைச்சிருக்கும். ஆனா ‘யு.பி.எஸ்.சி தேர்வு தான் இலக்கு’ன்னு முடிவு செஞ்ச பிறகு, சிம்பிளா ஏதாவது ஒரு டிகிரி படிக்கலாம்னு அம்மா சொன்னாங்க. அறிவியல்ல எனக்கு விலங்கியல் ரொம்பப் பிடிக்கும். அதனால  லயோலாவுல பி.எஸ்.சி விலங்கியல் சேந்துட்டேன். இரண்டாம் வருஷம் படிக்கிற வரைக்கும் ஐ.ஏ.எஸ்-ங்கிறது அம்மாவோட கனவா மட்டும்தான் இருந்துச்சு. அதுக்கப்புறம் தான் அது என்னோட கனவா மாறுச்சு.

லயோலாவுல ஒவ்வொரு டிபார்ட்மெண்டைச் சேர்ந்தவங்களுக்கும் ஒரு பகுதியைப் பிரிச்சுக் கொடுத்து அங்கே சர்வீஸ் பண்ண வைப்பாங்க. எங்களுக்கு சைதாப்பேட்டை பக்கத்துல நெருப்புமேடுன்னு ஒரு பகுதியை தந்தாங்க. அங்கே பிள்ளைகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துறது, கணவனை இழந்த பெண்களுக்கு வங்கிக்கடன் வாங்கி தொழில் அமைச்சுத் தர்றதுன்னு ஒரு வருஷத்துல நிறைய வேலைகள் செஞ்சோம்.

மௌலீஸ்வரன்
மௌலீஸ்வரன்

அப்போதான், ’40 பேர் சேர்ந்தே இவ்வளவு மாற்றங்களை உருவாக்க முடிஞ்சிருக்கே… 4000 அலுவலர்கள் வச்சிருக்கிற கலெக்டரால எவ்வளவு மாற்றங்களை உருவாக்க முடியும்’னு தோணுச்சு. யு.பி.எஸ்.சி தேர்வு மேல இன்னும் இறுக்கமான ஈடுபாடு வரத் தொடங்குச்சு. டிகிரி முடிச்சதும் யு.பி.எஸ்.சி தேர்வுக்கு பயிற்சி எடுத்துக்கலாம்னு முடிவு செஞ்சப்போ கொரோனா வந்திடுச்சு.

வெளியில போய் பயிற்சி எடுத்துக்க முடியல. சரி,காலத்தை வீணாக்க வேண்டாம்னு குருநானக் கல்லூரியில எம்.எஸ்.சி விலங்கியல் போட்டேன். கூடவே யு.பி.எஸ்.சி தேர்வுக்கும் பிரிப்பேர் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அந்த நேரத்துல சத்தியபாமா பல்கலைக்கழகத்துல நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கே என் பேச்சைக் கேட்ட எர்த் சயின்ஸ் பிரிவு பேராசிரியர் பிரபாகர், ‘உன் கல்விச்செலவு முழுவதையும் நானே ஏத்துக்கறேன், பி.ஹெச்.டி பண்ணு’ன்னு சொன்னார். ‘இப்படியொரு வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது, பி.ஹெச்டி பண்ணு’ன்னு எல்லாரும் சொன்னாங்க. எனக்கு அதைவிட யு.பி.எஸ்.சி தான் பெரிசா இருந்துச்சு.

2022-23-ல முதல்முறை முதல்நிலைத் தேர்வை எழுதினேன். கிளீயர் பண்ண முடியலே. அதைவிட, நாம நினைச்சமாதிரி யுபிஎஸ்சி தேர்வு சாதாரணம் இல்லேன்னு புரிஞ்சுச்சு. இன்னும் தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன். 2023-ல ‘நான் முதல்வன்’ ஸ்காலர்ஷிப் தேர்வெழுதினேன். 2024 முதல்நிலைத் தேர்வுக்காக அங்கேயே 8 மாதம் தங்கி பயிற்சியும் எடுத்துக்கிட்டேன். பகலிரவா படிச்சும் அந்த ஆண்டும் முதல் நிலைத் தேர்வை கிளீயர் பண்ண முடியல.

இந்த நேரம் வீட்லயே கொஞ்சம் தயக்கம் வரத் தொடங்கிடுச்சு. ஆனால், 2023 தோல்விக்கும் 2024 தோல்விக்கும் பெரிய வித்தியாசம் இருந்துச்சு. ரொம்ப கம்மியான மார்க்ல தான் தேர்ச்சியை இழந்திருந்தேன். நம்பிக்கையோட 2024-லயும் ‘நான் முதல்வன்’ ஸ்காலர்ஷிப் தேர்வு எழுதினேன். அதில  23வது ரேங்க் வாங்கி தேர்ச்சி பெற்றேன். அது பெரிய நம்பிக்கையைக் கொடுத்துச்சு. ‘நம்மால நிச்சயம் யு.பி.எஸ்.சி கிளீயர் பண்ண முடியும்’னு நம்பிக்கை வந்துச்சு.

UPSC
UPSC

என்னென்ன தவறுகள்லாலாம் செஞ்சிருக்கேன்னு பாத்தேன். ‘நாம ரொம்ப பக்கத்துல வந்துட்டோம்’னு புரிஞ்சுச்சு. 2025 முதல் நிலைத் தேர்வு எழுதினேன். நினைச்ச மாதிரி கிளீயர் பண்ணிட்டேன். வீட்ல எல்லாரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. ‘நிச்சயம் நீ யுபிஎஸ்சி கிளீயர்பண்ணிடுவே’ன்னு உற்சாகப்படுத்தினாங்க. அடுத்த 3 மாதம் ராத்திரி பகலா பிரதானத் தேர்வுக்கு படிச்சேன். இதுக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமா உதவித்தொகை கிடைச்சுச்சு. அரசு பயிற்சி மையத்துலயே தங்கி பயிற்சி எடுத்துக்கிட்டேன். கூடவே கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியிலயும் பயிற்சி எடுத்தேன்.

என்கூட படிச்சவங்கல்லாம் ரெண்டு முறை, மூணு முறை மெயின் எழுதினவங்க. சிலபேர் போஸ்டிங் எடுத்துட்டு திரும்பவும் தேர்வெழுத வந்தாங்க. இது எனக்குப் பெரிய தாழ்வு மனப்பான்மையை உருவாக்குச்சு.  முதல் 15 நாள் தடுமாறினேன். அதுக்கப்புறம், ‘நம்மால என்ன முடியுமோ அதைச் செய்வோம்’ன்னு முடிவு பண்ணி படிச்சேன். ஒருநாளைக்கு 12 மணி நேரம் படிப்புதான்.

தமிழ்நாடு அரசு நடத்துற அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் பத்திச் சொல்லியே ஆகணும். சகல வசதிகளோட அங்கே தங்கிப் படிக்க முடியும். தரமான சாப்பாடு, பால், ஸ்நாக்ஸ், ஏ.சி ரூம், ரொம்ப நெருக்கமா நின்னு சொல்லிக்கொடுக்கிற பயிற்சியாளர்கள்னு நீங்க பணம் கட்டிப் படிச்சாக்கூட கிடைக்காத வசதிகளை பண்ணித் தந்தாங்க. குடும்பம், ஆசிரியர்கள், நண்பர்கள் எல்லாரும் தான் அந்த நேரத்துல என்னை மனதளவுல காப்பாத்தினாங்க. சோர்ந்து போற நேரமெல்லாம் அவங்களுக்குப் போன் பண்ணி அழுவேன். பாஸ் பண்ணலேன்னா என் எதிர்காலம் என்னன்னு எனக்குப் புரியல. பயங்கர குழப்பமா இருந்துச்சு.

அவங்கள்லாம் கொடுத்த நம்பிக்கையில ஒரு வழியா பிரதான தேர்வை எழுதினேன். ஹாலை விட்டு வெளியே வந்தவுடனேயே ‘நாம நிச்சயமா கிளீயர் பண்ணிடுவோம்’ங்கிற நம்பிக்கை வந்திடுச்சு. வீட்லயும் போன் பண்ணி ‘கிளீயர் பண்ணிடுவேன்’னு சொல்லிட்டேன்.  பிரதானத் தேர்வு ரிசல்ட் வந்தபிறகு, ‘நான் ஐ.ஏ.எஸ் ஆயிட்டேன்’னு சொந்தக்காரங்கள்லாம் நம்பி வாழ்த்து சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா அதுக்குப்பிறகுதான் எல்லாத்தையும் விட பெரிய டாஸ்க் இருக்கு. இண்டர்வியூ.

UPSC
UPSC

5 சீனியர் ஆபீசர்கள் இருப்பாங்க. அவங்ககிட்ட அரைமணி நேரம் உரையாடணும்.ஆங்கிலத்துல பேசி எனக்குப் பழக்கமே இல்லை. அந்த அரைமணி நேரத்துல என்னை நான் நிரூபிக்கணும். அதுக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம் கைகொடுத்துச்சு. ஒரு மாதம் அரசு பயிற்சி மையத்துலயே தங்கிப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். உதவித்தொகையும் கொடுத்தாங்க. நிறைய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வந்து பேசி நம்பிக்கையூட்டினாங்க. பலமுறை மாக் இண்டர்வியூவும் நடத்தினாங்க.

எல்லாம் முடிஞ்சு பிப்ரவரி 5ம் தேதி நேர்காணல். பதினைந்து நாள் முன்னாடியே டெல்லி போயிட்டேன். நேர்காணல் ரொம்ப நல்லாவே போச்சு. அதை முடிச்சுட்டு வெளியே வந்த உடனே, எல்லாருக்கும் போன்பண்ணி ‘நிச்சயம் என் பேர் ரிசல்ட்ல இருக்கும்’னு சொல்லிட்டேன். நினைச்ச மாதிரியே ரிசல்ட் வந்திடுச்சு. ஐ.ஏ.எஸ் வர்றதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு…” என்கிறார் மௌலீஸ்வரன்.

“ரிசல்ட் வந்ததை அம்மாக்கிட்ட சொல்லும்போது அவங்க ரியாக்சன் என்ன?”
“நான் அப்போ சென்னையிலதான் இருந்தேன். ராஜேஷ்குமார்ன்னு எனக்கு ஒரு ப்ரண்ட் இருக்கான். முதல்நிலைத் தேர்வு ரிசல்ட் அவன்தான் பார்த்துச்சொன்னான். பிரதான தேர்வு ரிசல்டும் அவன்தான் பார்த்துச் சொன்னான். ‘பைனல் ரிசல்ட்டும் அவனே பாத்துச் சொல்லட்டும், நீ பாக்காதே’ன்னு வீட்ல சொல்லிட்டாங்க. முதல்நாளே நான் அவனைக் கூப்பிட்டு, ‘நீதான் ரிசல்ட் பாத்துச் சொல்லணும்.  அதுக்கிடையில எனக்கு போன் பண்ணாதே’ன்னு சொல்லிட்டேன். மார்ச் 6ம் தேதி பிற்பகல் 2 மணி இருக்கும்… அவன்கிட்ட இருந்து போன் வந்துச்சு… அப்பவே எனக்குத் தெரிஞ்சிடுச்சு, நாம கிளீயர் பண்ணிட்டோம்னு.

UPSC
UPSC

‘மௌலீஸ்லரன், 410’ன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான். நான் உடனே அம்மாவுக்குப் போன் பண்ணினேன். இருபது வருஷமா அவங்க எனக்கு போன் பண்ணும்போதெல்லாம் ‘மௌலீஸ்வரன் ஐ.ஏ.எஸ்’ன்னு தான் பேச ஆரம்பிப்பாங்க. முதல்முறையா நான், ‘மௌலீஸ்வரன் ஐ.ஏ.எஸ்’ன்னு சொன்னேன். அவங்க அழுவுறது, கத்துறது கேக்குது…  அவங்க சந்தோஷப்படட்டும்னு அதோட போனை கட் பண்ணிட்டேன். அதுக்கப்புறம் அப்பாவுக்குப் போன் பண்ணிச் சொன்னேன். அவரும் ரொம்ப சந்தோஷப்பட்டார்.” என்கிறார் மௌலீஸ்வரன்.

ஓய்வுபெற்ற  ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜவஹர், மௌலீஸ்வரனின் வெற்றிக்கு பெரியளவில் உதவி செய்திருக்கிறார்.

“அவர்கிட்ட நான் நாலுமுறை இண்டர்வியூ அட்டென்ட் பண்ணினேன். அவரே வீடியோ கால் பண்ணி பேசிக் காட்டச்சொல்வார். கரெக்சன் பண்ணுவார். ‘இதைப் படிக்க கஷ்டமா இருக்கு சார்’ன்னு சொன்னா, அவரே படிச்சு, சுருக்கி டைப் பண்ணி பி.டி.எப்பா அனுப்புவார். இந்த வெற்றியில அவரோட பங்கு ரொம்ப முக்கியமானது…” என்கிறார் மௌலீஸ்வரன்.

மௌலீஸ்வரனின் குடும்பம்
மௌலீஸ்வரனின் குடும்பம்

“எப்படியிருந்தது, உங்கள் மகன் யு.பி.எஸ்.சி தேர்ச்சி பெற்றுவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டபோது..?”
மௌலீஸ்வரனின் அம்மா சரஸ்வதியிடம் கேட்டேன்.

“கேட்டவுடனே அடுத்து என்ன பேசணும்னு தெரியல. உள்ளேயிருந்து அழுகையும் விம்மலும் தான் வெடிச்சுச்சு. வாழ்நாள் கனவு இது. கொஞ்ச நேரத்துல மயங்கி விழுந்துட்டேன். என் வாழ்நாள்ல அதுதான் முக்கியமான நேரம்…”  
கண்கள் பனிக்கின்றன சரஸ்வதிக்கு!  

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *