சென்னை: “எந்தக் கட்சியுடன் நான் இணையப் போகிறேன் என்பதைவிட, அடுத்ததாக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தீவிரமாக யோசித்து கொண்டிருக்கிறேன்” என்று விசிக-வில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் ஆதவ் அர்ஜுனா கூறியது: “விசிக தலைவர் திருமாவளவனின் வார்த்தைகளுக்கு நான் எப்போதும் கட்டுப்படுபவன். அவர் சொன்ன வாழ்த்துகளையும், அன்பையும், ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டு நான் பயணிப்பேன். அவருடைய விமர்சனங்கள் அனைத்துமே எனக்கான ஆலோசனைகளாகத்தான் பார்க்கிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றிருக்கிறேன். அவர் எப்போதுமே எனக்கு ஆசான். கொள்கை சார்ந்த அரசியலில் அவருடன் என் பயணம் இருக்கும்.
வெள்ளப் பாதிப்புக்கான நிவாரணங்களில் தமிழக அரசு பாரபட்சம் பார்ப்பதாக தவாக தலைவர் தி.வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர் கூட்டணி நேரத்தில்தான் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுவதாகவும் விமர்சித்துள்ளார். அவருடைய கருத்தில் நானும் உடன்படுகிறேன். இன்னும் கொஞ்சம் நாட்களில் அவரையும் சங்கி என்று சொல்லிவிடுவார்கள்.
இதற்காக தான் குறைந்த பட்ச செயல்திட்டத்தை உருவாக்கி எதிர்காலத்தில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்கிற வகையில் கொள்கை தலைவர்கள் அனைவரும் ஒரு புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்கிறேன்.
இன்றைக்கு எந்தக் கட்சியுடன் நான் இணையப் போகிறேன் என்பதைவிட, அடுத்ததாக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தீவிரமாக யோசித்து கொண்டிருக்கிறேன். என் மீது எழும் சந்தேகங்களுக்கு எனது அரசியல் பயணத்தின் மூலம் பதில் சொல்லுவேன்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, விசிகவில் இருந்து ஆத்வ் அர்ஜுனா விலகியிருப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், ஒரு கட்சியின் தலைமைக்கு கீழ் வந்த பிறகு கட்சிக்கு கட்டுப்பட்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.