“நான் வந்துவிட்டேன் என கவலைப்பட வேண்டாம்-விஜய்க்கு வழிகாட்டியாகவே இருப்பேன்”-செங்கோட்டையன் பேச்சு | tvk sengottiyan speech

Spread the love

அதிமுக-வில் இருந்து தவெக-வில் அண்மையில் இணைந்த செங்கோட்டையன் தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்துக்கு இன்று மாலை (28.11.2025) வந்தார். அவருக்கு கோபிசெட்டிபாளையத்தில் தவெக தொண்டர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து, தொண்டர்கள் மத்தியில் பேசிய செங்கோட்டையன், “மூன்று முறை முதல்வராக இருந்தவர் எம்ஜிஆர், ஐந்து முறை முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அந்த வரிசையில் நாளை தமிழகத்தை ஆளப் போகிறார் தவெக தலைவர் விஜய். நான் முதல்முறை எம்ஜிஆரு-டன் பயணம் செய்தேன். வெற்றியை எட்டினோம். இரண்டாம் முறை அம்மாவுடன் பயணம் செய்தேன். அப்போதும் வெற்றியை எட்டினோம். மூன்றாம் தலைமுறையாக இளவல் விஜய்யுடன் பயணம் செய்யப் போகிறேன். 2026-இல் மக்கள் சக்தியால் விஜய் முதல்வராகப் போகிறார். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. என்னைப் பார்த்து, 50 ஆண்டு கால அரசியலில் என்ன செய்திருக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கேட்கின்றார். நாளை கோபிசெட்டிபாளையத்துக்கு வரும் அவரைப் பார்த்து நான் கேட்கிறேன்.

விஜய் - செங்கோட்டையன்

விஜய் – செங்கோட்டையன்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக-வுக்கு வெற்றி கிடைத்ததா? அதிமுக-வில் எனக்கு வந்த வாய்ப்புகளை அவருக்காக விட்டுக் கொடுத்தேன். அவரை முதல்வர், பொதுச் செயலாளராக முன்மொழிந்தேன். ஆனால், அவரிடம் சமத்துவம் இல்லை. 50 ஆண்டு காலம் அதிமுக-வுக்காக உழைத்துள்ளேன். அதற்குப் பரிசாக என்னோடு இருக்கும் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கினார். கட்சி நிர்வாகியின் வீட்டுக்கு நான் இரங்கல் செய்தி கேட்கச் சென்றதற்காக அவரையும் நீக்கினார். இதைவிட வெட்க கேடான செயல் ஏதாவது இருக்க முடியுமா? உங்கள் தலைவரை சந்திக்க முடியுமா? என்று கேட்டார்கள்.ஒன்னேகால் மணி நேரம் நான் அழைத்துச் சென்றவர்களுக்கு உங்கள் தலைவர் துண்டைப் போட்டு வரவேற்றார். நாளை நாம் வரலாறு படைக்கப் போகிறோம். ஆண்டவர்களே ஆள வேண்டும் என்று என்ன உள்ளது. புதிய தலைமுறை ஆள வேண்டாமா? படத்தில் நடித்தால் 500 கோடி வருமானம் கிடைக்கும். ஆனால், அது தேவையில்லை என்று மக்கள் பணிக்கு வந்துள்ளார் விஜய்.

செங்கோட்டையன்

செங்கோட்டையன்

ஜெயலலிதா படத்தை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்கின்றனர். இங்கு ஜனநாயம் உள்ளது. அதனால், அவர் படத்தை வைத்துள்ளேன். ஆனால், அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி படத்தை மட்டும்தான் வைத்துக் கொள்ள முடியும். எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கில், ஊழலற்ற புனித ஆட்சி விரைவில் மலரும். இளைஞர்களோடு பணியாற்றுகின்ற நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் எப்படி வழிகாட்டியாக இருந்தேனோ அதேபோல், விஜய்க்கும், உங்களுக்கும் வழிகாட்டியாக இருப்பேன். நீங்கள் அசைந்தால் தமிழகம் அசையும். உங்களுடைய தளபதிதான் அடுத்த முதல்வர். டிசம்பருக்குப் பிறகு தவெக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். முன்னாள் அமைச்சர்கள் பலரும் இங்கு வர தயாராகவுள்ளனர். நாங்கள் வந்துவிட்டோம் என கவலைப்பட வேண்டாம். நாங்கள் உங்களுக்கு வழிகாட்டியாக இருப்போம்” என்றார் செங்கோட்டையன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *