நாமக்கல்: நாமக்கல் இளைஞர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 லட்சம் இழந்துவிட்டதாக நாடகமாடிய நிலையில், மனைவி, குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் ரயில் முன் பாய்ந்து அவரும் தற்கொலை செய்துகொண்டார்.
நாமக்கல்லில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 லட்சம் பணம் இழந்ததாக நாடகமாடி, மனைவி, 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மாயமான இளைஞர் கரூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்துள்ளது.

நாமக்கல் பெரிய மணலியைச் சேர்ந்தவர் பிரேம்ராஜ்(33). இவர் தனது உறவுக்கார பெண்ணான மோகனப்பிரியா(33) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரணதி(6), பிரனீஷ்(2) என்ற இரு குழந்தைகள் இருந்தனர்.
இவர்கள், நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள பதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் செவ்வாய்க் கிழமை, மோகனபிரியா மற்றும் அவரது இரு குழந்தைகள் வீட்டினுள் இறந்த நிலையில் கிடந்தனர். அவர்கள் கழுத்து இறுக்கப்பட்ட தடம் காணப்பட்டது.
அக்கம், பக்கத்தினர் நாமக்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மூவரின் சடலத்தை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடந்த பத்து நாள்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 லட்சம் இழந்ததாகவும், அதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாகவும் பிரேம்ராஜ் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீஸாரிடம் சிக்கியது. ஆனால் பிரேம்ராஜ் மட்டும் மாயமானது போலீஸாருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
அவருடைய கைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து நாமக்கல் காவல் ஆய்வாளர் கபிலன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். இதில் பல்வேறு தகவல்கள் போலீஸாருக்கு தெரியவந்தன.
அதாவது, நாமக்கல் தனியார் வங்கியில் காப்பீட்டு பிரிவில் பணியாற்றி வந்த பிரேம்ராஜுக்கும், அங்கு பணியாற்றிய நாமகிரிப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் வங்கி நிர்வாகத்திற்கு தெரிய வந்ததையடுத்து, இருவரையும் பணிநீக்கம் செய்து விட்டனர்.
மேலும் குடும்பத்தினருக்கு இந்த தகவல் தெரிய வந்ததால் பிரேம்ராஜை அவர்கள் கண்டித்தனர். மோகன பிரியாவின் தந்தை ரூ.6 லட்சத்தை தொழில் செய்ய அவருக்கு வழங்கியதாகவும், அந்த பணத்தை சூதாட்டத்தில் அவர் இழந்து விட்டதாகவும் தெரிகிறது.
இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு பெற்றோரும் சமாதானப்படுத்தி வைத்தனர். திங்கள்கிழமை இரவு மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் செவ்வாய்க்கிழமை மோகனபிரியா மற்றும் இரு குழந்தைகள் இறந்த நிலையில் வீட்டில் கிடந்தனர். பிரேம்ராஜ் தலைமுறைவாக இருந்தார்.
இதற்கிடையே, கரூருக்குச் சென்ற பிரேம்ராஜ், அன்று இரவு 10.30 மணி அளவில் பசுபதிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அங்குள்ள ரயில்வே போலீஸார் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதனால், குழந்தைகள், மனைவியை இவர் கழுத்தை இறுக்கிக் கொன்றாரா? அல்லது அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற மர்மம் பிரேம்ராஜ் தற்கொலையால் போலீஸாருக்கு தெரியாமலே போய் உள்ளது. இருப்பினும் உடல் கூறாய்வு அறிக்கை கிடைக்கும் பட்சத்தில் மோகனபிரியா, அவரது குழந்தைகள் எவ்வாறு இறந்தார்கள் என்பது தெரியவரும். இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.