சாத்தூர்: “நாம் தமிழர் கட்சி வளர்வதை பார்த்து திமுக, பாஜக அஞ்சுகின்றன,” என்று சீமான் கூறினார். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல்விழியின் மறைந்த சகோதரி அமுதாவின் 42-வது பிறந்தநாள் நிகழ்வு நடந்தது. இந்நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்துகொண்ட சீமான், அமுதா நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் வழக்கை திரும்ப விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளது சரிதான். அதனை வரவேற்கிறேன். சொத்துக் குவிப்பு வழக்கு விசாரிக்க வேண்டுமென்றால் மொத்த அமைச்சர்களையும் அழைத்து தான் விசாரிக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்து குவிப்பதை எப்படி ஏற்க முடியும்?
இல்லம் தேடி மருத்துவம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஊதியம் வழங்கவில்லை என போராடி வருகின்றனர். இப்போது எதற்காக ஃபார்முலா கார் பந்தயம்? தமிழ் கடவுள் முருகனை பாஜக, திமுக தற்போது கையில் எடுத்துள்ளது. நாம் தமிழர் கட்சி வளர்வதை பார்த்து திமுக, பாஜக அஞ்சுகிறது. இதனால் நாங்கள் கையில் எடுத்த முருகனை தற்போது இரு கட்சிகளும் கையில் எடுத்துள்ளன,” என்று அவர் கூறினார்.