கோவை: நாம் தமிழர் கட்சியில் இருந்து கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் விலகுவதாக அறிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மகளிரணி செயலாளர் அபிராமி, வடக்கு மாவட்ட வணிகர் பாசறை செயலாளர் செந்தில்குமார், வடக்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஏழுமலை பாபு ஆகியோர் கோவையில் இன்று (நவ.22) செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் முரணான பேச்சுகளால், வடக்கு மாவட்ட பொறுப்பாளர்களாகிய நாங்கள், கட்சியில் இருந்து வெளியேறுகிறோம்.
சீமானின் செயல்பாடுகள் கொள்கை ரீதியாக இல்லாமல் இருக்கிறது. கொங்கு மண்டலத்தில் அருந்ததியர்களை வந்தேறி என்கிறார். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. சீமானின் செயல்பாடுகள் கொள்கைக்கும், நடைமுறைக்கும் மாற்றாக இருக்கிறது. கொங்கு மண்டலத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரை தொடர்பு கொள்வது என்பதே தெரியவில்லை.
நாங்கள் எந்த கட்சியில் இணைவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தென் மாவட்டத்தில் இரு சமூகங்களிடையே பிளவுபடுத்தும் வகையில் சீமான் பேசுகிறார். நாம்தமிழர் கட்சியின் செயல்பாடுகள் வெற்றியை நோக்கிய பயணமாக இல்லை. சீமானை விட, நடிகர் விஜய் பெரிய தலைவர் கிடையாது. எனவே, அவர் பின்னால் நாங்கள் செல்ல வேண்டியது இல்லை.
சீமானின் பேச்சு, கருத்தியலை பார்த்து கட்சிக்கு வந்தோம். ஆனால், அவரது செயல்பாடு அப்படி இல்லை. இரு வருடங்களாக தலைமைக்கு எங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தோம். ஆனால், நான் எடுப்பதுதான் முடிவு. இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் போங்கள் என்கின்றார். அதனால் நாங்கள் வெளியேறுகிறோம். தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். அதனால் அடுத்தடுத்து வெளியேறுகின்றனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.