நாய் வளர்ப்புக்கான லைசன்ஸ் கட்டணத்தை குறைக்க தமிழக பாஜக வலியுறுத்தல் | Tamil Nadu bjp insists on reducing the license fee for dog breeding

1318289.jpg
Spread the love

சென்னை: “நாய் வளர்ப்புக்கான லைசன்ஸ் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக குறைக்க வேண்டும்” என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் நாய் வளா்ப்புக்கென புதிய கொள்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாய் வளா்ப்புக்கான உரிமம் பெற வயது, உரிமத்தொகை, உரிமம் செல்லுபடியாகும் காலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களை தெளிவுபடுத்தி உள்ளது. நாய்களை வளர்க்க விரும்புவோா் மற்றும் வளர்ப்பவர்களும் இனி அதற்கென உரிய உரிமத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மற்றும் தமிழக விலங்குகள் நல வாரியத்திடமிருந்து விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டும். இதில் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாய் இனங்களை மட்டுமே வளர்க்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக, நாய் வளர்த்து வருபவர்கள், வளர்க்க விரும்புபவர்கள் உரிய விண்ணப்பத்துடன் ரூ.5,000 பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். நாட்டு நாய்களாக இருக்கும் பட்சத்தில் பதிவுக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டு ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்படும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த உரிமத்தின் காலம் முடிந்த பிறகு, மீண்டும் ஒரு மாதத்துக்குள் அதை புதுப்பித்துக் கொள்ளலாம். அப்படிச் செய்யாவிட்டால், நாளொன்றுக்கு ரூ.500 அபராதம் என்ற அடிப்படையில் உரிமம் புதுப்பிப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, நாய்களை வளர்க்கும் லட்சக்கணக்கான ஏழை, நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

தமிழகத்தில் நாய்களை வளர்க்கும் மக்களில் 80 முதல் 90 சதவீதம் கிராமப்புற ஏழை, நடுத்தர, விவசாய மக்கள் ஆவர்.இவர்கள் தங்களின் குடும்பத்தில் ஒருவராக நாய்களை வளர்த்து வருகின்றனர். இதுதவிர, 10 சதவீத விகிதத்திற்கு கீழ் உள்ள பணக்காரர்களும் நாய்களை வளர்க்கின்றனர். எனவே,வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு குறிப்பாக அரசிடம் உதவிகள் பெறும் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு தற்போது அறிவித்துள்ள பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும்.

நாய்களை வளர்க்க விரும்பும் வருமான வரி கட்டக்கூடிய அனைவருக்கும் தமிழக அரசு தற்போது வகுத்துள்ள கட்டணங்களை பெறுவதில் தவறு இல்லை. மேலும், உரிமத்தின் காலம் முடிந்த பிறகு, ஒரு மாதத்துக்குள் அதை புதுப்பிக்க தவறினால் நாளொன்றுக்கு ரூ.500 அபராதம் என்பதை வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.100 ஆகவும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.10 ஆகவும் புதுப்பிப்பு கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *