விவசாய சங்கங்கள் உருவாகக் காரணமாகயிருந்த நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு தினத்தையொட்டி, அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: விவசாய பெருமக்களுக்காகவே வாழ்ந்த உத்தமரான நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டில் அவரது தியாகத்தையும் புகழையும் போற்றுவோம். அவரது நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் துடியலூர் – கோவில்பாளையம் இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டு வரும் குருடம்பாளையம் என்ஜிஓ காலனி ரயில்வே மேம்பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்படும்.
அவர் பிறந்து வாழ்ந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளைச் செய்திருக்கிறேன். அவரது கனவுகளை நிறைவேற்றத் தொடர்ந்து உழைப்போம்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: விவசாயத்தின் மீது தனக்கிருந்த அதீத பற்றின் காரணமாக, வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கான போராட்டங்களை ஒருங்கிணைத்தவர். அவரது தியாகங்களைப் போற்றி வணங்குவோம்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: நூற்றாண்டு தினத்தில் நாராயணசாமி நாயுடுவின் புகழைப் போற்றி வணங்குவதுடன், அதிமுக ஆட்சியில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டதை பெருமையுடன் நினைவுகூர்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: விவசாயிகளின் வாழ்வுரிமைக்காகவும், விவசாயப் போராட்ட முறைகளைச் செழுமைப்படுத்தவும் நாராயணசாமி நாயுடுவின் தன்னலமற்ற செயல்பாடுகள், அவரை விவசாய பெருந்தலைவர் என்று அன்போடு அழைக்குமளவுக்கு உயர்வானவை. விவசாயிகளுக்கு இன்று இலவச மின்சாரம் கிடைப்பதற்குக் காரணமான அவரது புகழைப் போற்றி வணங்குகிறோம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: விவசாயிகளின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் அவர் நடத்திய போராட்டங்களையும், தியாகங்களையும் இந்த நாளின் உழவர்கள் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: விவசாயிகளின் உரிமைக்காக போராடியவரும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனருமான நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரை நினைவுகூர்ந்து விவசாயிகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் அவர் செய்த தியாகத்தை போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.